உலகமே கொரோனா தொற்றால், அச்சத்தில் உறைந்த நேரம்... இந்தியாவில் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டு, ஊரடங்கால் முடங்கிப் போன சமயம் அது... ஒட்டு மொத்த தமிழ்நாடும், கொரோனா நோய்த்தொற்று குறித்த அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த நேரம் அது... அப்போது வந்தவர் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன். அவரது கொரோனா நோய்தொற்று தொடர்பான அறிவிப்போடு, அவரது பேட்டி, பெண்களையும் கவர்ந்தது. நேர்த்தியான ஆடை, அவரது பேச்சுக்காகவே, டிவி முன் காத்திருந்த நேரம் அது...தமிழக அரசுப் பணியில் தனக்கென தனி முத்திரையை பதித்த ஐஏஎஸ் பீலா வெங்கடேசன். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக இருந்த வெங்கடேசனுக்கும், சாத்தான் குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராணிக்கும் செல்ல மகளாக பிறந்தவர் பீலா வெங்கடேசன். சென்னையில் மருத்துவம் படித்து மருத்துவராக பணியாற்றிய இவர், சமூகத்துக்கு பெரிய அளவில் சேவை செய்ய நினைத்து 1997ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வு எழுதி, ஐஏஎஸ் அதிகாரி ஆனார். பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் திறமையான ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தின் துணை ஆட்சியராகவும், நகர ஊரமைப்பு இயக்கத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குனராகவும் முக்கிய பதவிகளை வகித்தார். இவரது நிர்வாக திறமை பாராட்டப்பட்டதால், கொரோனா நோய்த்தொற்று காலத்தில், சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். கொரோனா பரவலின் போது, தமிழக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதிப்பு, சிகிச்சை முறை, அரசின் அறிவிப்பு என அனைத்தையும் ஊடகத்தை சந்தித்து, மக்களுக்கு எடுத்துரைத்தார். கொரோனா என்ற பெருந்தொற்றின் போது, நிதானமாக செயல்பட்டு புள்ளி விவரங்களை அளித்து, இரவு பகல் பாராமல் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் தனது பணியை திறம்பட செய்தவர். இதனால் மக்களின் பாராட்டையும் பெற்ற இவர், எரிசக்தி துறை செயலாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த பீலா வெங்கடேசனுக்கு இரு மகள்கள் உள்ளனர். சக அதிகாரிகள், பணியாளர்களை மட்டுமல்ல, சாமானியர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர்... என்றும் நினைவில் நிற்பவர்...