”சார் சார் என் பொண்டாட்டிய காணோம், அவளோட சேர்ந்து என் பொண்ண கட்டிக்க இருந்த மாப்பிள்ளையையும் காணோம், இது மட்டுமில்லாம பொண்ணோட கல்யாணத்துக்கு வச்சி இருந்த நகை, பணத்தையும் காணோம்னு” போலீஸ் ஸ்டேசனுக்கு ஓடி வந்த ஒருவர் மூச்சிறைக்க கூறினார். அவர் சொன்னதை கேட்ட போலீசார் விசாரிக்க தொடங்கினர். அதில், உத்தரபிரதேச மாநிலம், அலிகார் அருகே மத்ராக் பகுதிியில் இருக்கும் ஜிதேந்திர குமார் என்பவரின் மகளுக்கும், ராகுல் என்பவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்துக்கு ஒருவாரமே இருக்கும் நிலையில் ராகுலுடன், மணமகளின் அம்மா ஓடி போனதாக கூறப்படுகிறது. இதனால் திடுக்கிட்ட ஜிதேந்திர குமார், மணமகனுடன் தன் மனைவி சென்று விட்டதாக கூறி புகார் அளித்தார். அதில், என் மகளின் திருமணத்துக்காக எல்லாருக்கும் அழைப்பிதழை கொடுத்து விட்டோம், திருமணத்துக்கான ஏற்பாடுகளையும் செய்து விட்டோம். கடைசி நேரத்தில் என் மனைவியும், மணமகனும் ஓடிவிட்டனர். நான் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தேன். திருமணம் நிச்சயிக்கப்பட்டதில் இருந்து ராகுல், என் மகளை விட்டுவிட்டு என் மனைவியிடமே அதிகமாக செல்போனில் பேசி வந்தார். இருவரின் நடவடிக்கையில் சந்தேகமாக இருந்ததால் கவனித்தபோது, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை பேசியுள்ளனர். திருமணத்துக்காக நான் பெங்களூருவில் இருந்து வீட்டுக்கு வந்ததும், இருவரும் சேர்ந்து திருமணத்துக்கு முன்னாடியே வீட்டைவிட்டு ஓடியுள்ளனர். என் மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த நகை, பணத்தையும் எடுத்து கொண்டு சென்றுள்ளனர். இருவரின் செல்போனுக்கும் கால் செய்தபோது என்னிடம் பேசிய ராகுல், என் மனைவியை விட்டுவிடும்படி கூறியதாக ஜிதேந்திரகுமார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை கேட்ட போலீசார், என்ன சொல்வது என தெரியாமல் திகைத்ததுடன், ஓடிப்போன மணமகளின் தாயையும், மணமகனையும் தேடி வருகின்றனர்.