வியூஸ், லைக்ஸ் ஆகியவற்றிற்காக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து பணத்தை கட்டு கட்டாக ஆகாயத்தை நோக்கி வாரி இறைத்த யூடியூபர்ஸ், இன்ஸ்டாகிராமர்ஸ். தங்களுடைய youtube சேனல்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஆகியவற்றை அதிகம் பேர் பார்க்கவும், அதிகம் பேர் விரும்பவும் செய்ய அவற்றை நிர்வகிப்பவர்கள் பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்ட தங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். அதேபோன்ற சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் உள்ள முக்கிய பகுதியான கூக்கட்ப்பள்ளி சாலையில் நடைபெற்றது. “its_me_power,” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பிரபலமாகி இருக்கும் பவர் ஹர்ஷா என்று கூறப்படும் மகாதேவ் என்பவர்,கூக்கட்பள்ளி சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தன்னுடைய நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் திடீரென்று பண்டல் பண்டலாக பணத்தை வானத்தை நோக்கி வாரி இறைத்தார். பொதுமக்களும் அவற்றை பொறுக்கி எடுத்துக் கொண்டனர். நான் வாரி இறைத்த பணம் எவ்வளவு என்பதை தெரிவிக்கும் நபருக்கு என்னுடைய அடுத்த வீடியோவில் உரிய பரிசை அறிவிக்க இருக்கிறேன் என்றும் ஹர்ஷா தெரிவித்திருக்கிறார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடத்தப்படும் இது போன்ற செயல்கள் காரணமாக பொதுமக்கள் திடீரென்று கூட்டம் சேருவது, கூட்ட நெரிசல் ஏற்படுவது ஆகியவை நடைபெறுகின்றன. எனவே இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்