தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று, மதுரை மேற்கு தொகுதியை அதிமுகவின் கோட்டையாக மாற்றி வைத்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு திமுக அமைச்சர் மூர்த்தி தீவிரமாக செக் வைத்துள்ளதாகவும், அதனால் 2026ல் தங்களின் கோட்டை தகர்ந்துவிடுமோ? என்ற அச்சத்தில் செல்லூர் ராஜூ கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுகவினரும், அதிமுகவினரும் போட்டிபோட்டு மேற்கை குறிவைத்து காய் நகர்த்தி வரும் நிலையில், கூட்டணியில் உள்ளவர்களும் அந்த தொகுதியையே கேட்டு அடம்பிடிப்பதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.* 2021 தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக* 2021ல் அதிமுகவை போன்றே மற்ற 5 தொகுதிகளை கைப்பற்றிய திமுகவினர்* மதுரை மேற்கு, மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி அதிமுக வெற்றி* மதுரை கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் சோழவந்தானில் திமுக வெற்றி கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுக 5 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மதுரை மேற்கு, மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 5 தொகுதிகளில் அதிமுகவும், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றது. அப்படி பார்த்தால் திமுகவும் அதிமுகவும் சமபலத்திலேயே உள்ளது. ஆனாலும், கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக உள்ள மதுரை மேற்கு, மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் திமுக கால் வைக்கவே முடியவில்லை.* கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக உள்ள மதுரை மேற்கு* 5 தொகுதிகளை பிடித்தும் அதிமுக கோட்டையில் கால் வைக்க முடியாத திமுக* 2026 தேர்தலில் அதிமுகவின் கோட்டையை தகர்க்க திமுக தலைமை வியூகம்* மேற்கில் தொடர்ச்சியாக வெற்றியை பார்த்துக் கொண்டிருக்கும் செல்லூர் ராஜூஇதனால், வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கையில் எடுத்துள்ள வியூகமே அதிமுகவின் கோட்டையை தகர்த்தெறிய வேண்டும் என்பது தானாம். அதிலும், தொடர்ச்சியாக வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கும் செல்லூர் ராஜூவின் மதுரை மேற்கு, ராஜன் செல்லப்பாவின் திருப்பரங்குன்றம், ஆர்.பி.உதயகுமாரின் திருமங்கலம் தொகுதிகள் மீதுதான் திமுகவிற்கு பெருங்கண்ணாம். அதற்காகவே, உட்கட்சி பூசலுக்கெல்லாம் இடமே கொடுக்கவில்லையாம். இத்தனை காலமும் பூத்வாரியாக, வார்டு வாரியாக ஆட்களை நியமித்த அவர்கள், தற்போது தெருவாரியாக நிர்வாகிகளை நியமித்து ஒவ்வொரு குடும்பத்தினரின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் அள்ள தனி கவனம் செலுத்தி வருகிறார்களாம்.* மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம் மீது கண் வைத்துள்ள திமுக* உட்கட்சி பூசலுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் தீவிர அரசியல் பணிகள்* தெருவாரியாக நிர்வாகிகளை நியமித்து வாக்குகள் அள்ள திமுக தனிகவனம்* செல்லூர் ராஜூவிற்கு செக் வைக்க, அமைச்சர் மூர்த்திக்கு அசைன்மெண்ட்முதலில், செல்லூர் ராஜூவிற்கு செக் வைக்க, மதுரை மேற்கில் அமைச்சர் மூர்த்தியை பொறுப்பாளராக நியமித்துள்ளதாம் கட்சி தலைமை. அமைச்சரின் செல்லப்பிள்ளையான தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி தான், செல்லூர் ராஜூவுக்கு எதிராக களமிறங்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதுஒருபுறமிருக்க, தனக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட்டை அச்சுப் பிசகாமல் செய்து முடித்து தலைமையிடம் பாராட்டைப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் இறங்கி உள்ள அமைச்சர் மூர்த்தி, மக்களுக்கான நலத்திட்டங்களை ஓடி ஓடி வழங்கி வருகிறாராம். Related Link தேர்தல் பயணம் * தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜியை களமிறக்க உள்ள மூர்த்தி?* மக்களுக்கான நலத்திட்டங்களை ஓடி ஓடி வழங்கி வரும் அமைச்சர் மூர்த்தி* பட்டாவுக்காக போராடிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய மூர்த்தி* ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற முகாமை நடத்தி சரிசெய்யப்படும் பிரச்சனைகள்திமுக மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் சீட் கேட்கப் போவதாக கூறப்பட்ட நிலையில், அவரை சந்தித்து தன்பக்கம் வைத்துக்கொண்டாராம் மூர்த்தி. மற்றொரு திமுக மாமன்ற உறுப்பினர் லத்திகாஸ்ரீ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன்வரை நேரில் பார்த்து அடிபோடுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜாவும் தன்பங்குக்கு, மேற்கில் தனக்கு கருணை காட்டினால் காலத்திற்கும் நன்றியுடன் இருப்பேன் என துணை முதலமைச்சர் உதயநிதியின் காதில் தனது விருப்பத்தை போட்டு வைத்துள்ளாராம். இப்படி ஆளாளுக்கு தலைமைக்கு நெருக்கமான பெரிய கைகளிடம் பேசி வைத்திருந்தாலும் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவு என்னவோ அவரது செல்லப்பிள்ளை பாலாஜிக்கு தானாம். * மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் மேற்கில் சீட் கேட்பதாக தகவல்* ஜெயராமனை அழைத்து நேக்காக அமைச்சர் சமரசம் பேசியதாக தகவல்* திமுக மாமன்ற உறுப்பினர் லத்திகாஸ்ரீயும் மேற்கில் வாய்ப்பு கேட்பதாக தகவல்* புறநகர் மாவட்ட செயலாளர் மணிமாறன் லத்திகாஸ்ரீக்காக சிபாரிசு?* மேற்கை சீட் கேட்கும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா?2011, 2016, 2021 என தொடர்ச்சியாக, தொகுதியில் கரை வேட்டியுடன், காலரை தூக்கிவிட்டு மேற்கில் கெத்தாக வலம் வந்தாலும் அமைச்சர் மூர்த்தியின் அதிரடி நடவடிக்கைகள் செல்லூர் ராஜூவுக்கு லேசாக ஆட்டத்தை கொடுத்துள்ளது. தொகுதி கைமாறினால் என்ன செய்வது? அதற்கு மாற்றாக வேறு தொகுதியையாவது கைப்பற்றினால்தானே ஊருக்குள் மரியாதை என மனக்கணக்குப்போட்ட செல்லூர் ராஜூ, எடப்பாடியாரின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸ்களை, கடந்த மாதம் முதல் ஆளாக மதுரை தெற்கு தொகுதியில் உள்ள மக்களுக்கு வீதி வீதியாக வழங்கி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. அதனை கவனித்த செல்லூர் ராஜூவின் நலம் விரும்பிகளும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் 15 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து மக்களுக்கு பரிச்சயமாகி இருக்கும்போது அவ்வளவு எளிதில் அவர்கள் கைவிட மாட்டார்கள் என தைரியம் கொடுக்க, மீண்டும் மேற்கு பக்கமே வந்து மக்களுக்கு அண்டா, குண்டா, கேஸ் ஸ்டவ், வேட்டி, சேலை, குடம் என நலத்திட்டங்கள் வழங்கி வருகிறாராம்.* அமைச்சர் மூர்த்தியின் ஆதரவு பாலாஜிக்கு என தகவல்* அமைச்சர் மூர்த்தியின் அதிரடி நடவடிக்கைகளால் செல்லூர் ராஜூ அச்சம்?* பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய செல்லூர் ராஜூஇப்படி திமுகவினரும், அதிமுகவினரும் போட்டிபோட்டு 2026ஐ தங்களுக்கே சொந்தமாக்குவதற்காக மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக செல்லூர் ராஜூ கொடுத்த வாக்குறுதிகளில் எவ்வளவு நிறைவேற்றினார் என தொகுதி மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு, கடந்த 25 ஆண்டுகாலம் மதுரை மேற்கு அதிமுகவின் கோட்டையாக தான் இருக்கிறது, ஆனாலும் என்ன புண்ணியம் என குறைபட்டுக்கொள்ளும் மக்கள், கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி கொடுத்ததோடு சரி, அது வந்தபாடில்லை, அதேபோல் விளையாட்டு மைதானம் கொண்டு வரப்படும் என வீரவசனம் பேசியதோடு சரி, அதனையும் கண்ணில்காட்டவில்லை. மேலும் தொகுதியில் கல்லூரி அமைக்கப்படும் என தங்களின் காதில் போட்டதோடு சரி, அதுவும் ஒரு ஓரமாகதான் கிடக்கிறது என அதிருப்தியை அடுக்குகின்றனர். அது மட்டுமா? முத்துப்பட்டியில் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிசை மாற்றுவாரியத்தால் கொடுக்கப்பட்ட இடங்களுக்கு பட்டா, சத்தியமூர்த்தி நகர் மக்களுக்கு சாதி சான்றிதழ், போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண 2 உயர்மட்ட மேம்பாலம் என கொடுத்த வாக்குறுதிகள் அலுங்காமல் அப்படியேதான் கிடப்பதாக புகாரை பொரிந்து தள்ளுகின்றனர். * மதுரை மேற்கில் தேமுதிகவும் சீட் கேட்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மேற்கில் வாய்ப்பு கேட்பதாக தகவல்* மதுரை மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் த.வெ.க. சார்பில் போட்டி?இதுஒருபுறம் இருந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுகவின் தினகரன் இணைந்ததால் அதனை கூடுதல் பலமாக நினைக்கும் செல்லூர் ராஜூ, முக்குலத்தோர் வாக்குகளும் கடைசிவரை கைவிடாது என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். விஜயகாந்த் பிறந்த ஊர் எனவும் அதனால் நூற்றுக்கு நூறு வெற்றி உறுதி எனவும் திமுக தலைமையிடம் மறுக்க முடியாத ஒரு ரீசனை முன்வைத்து, மாவட்ட செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டனை போட்டியிட தேமுதிக திட்டம் வைத்துள்ளார்களாம். அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மேற்கில்தான் சீட் கேட்டுள்ளார்களாம். இப்படி மேற்கிற்கான டிமாண்ட் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிகரித்துள்ளது. * நாம் தமிழர் கட்சி சார்பில் விக்னேஷ்குமார் மேற்கில் போட்டி என தகவல்* மதுரை மேற்கில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும்தான் உச்சகட்ட போட்டி* அதிமுக தனது கோட்டையை 2026 சட்டமன்ற தேர்தலில் எட்டிப் பிடிக்குமா? இதனிடையே, அரசியலில் நியூ அட்மிஷனான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினரும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியனை மேற்கில் நிற்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். அதேபோல், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் விக்னேஷ்குமார் மேற்கில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அதிமுக தனது கோட்டையை 2026 சட்டமன்ற தேர்தலில் எட்டிப் பிடிக்குமா? அல்லது கோட்டை விடுமா? என்பதையும் செல்லுர் ராஜூவிற்கு, அமைச்சர் மூர்த்தி வைத்த செக் எடுபடுமா? அல்லது எடுபடாதா? என்பதையும் பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும். Related Link சீட்டுக்காக போராடும் அதிமுகவினர், உள்ளடி வேலை செய்யும் திமுகவினர்?