தந்தை - மகன் இடையேயான மோதலுக்கு மத்தியில், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ஜி.கே.மணி எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசுவது போன்ற காட்சி வெளியாகி சமூக வலைதளத்தில் விவாதத்திற்குள்ளாகி வருகிறது. அதேபோல் பாமக பொதுக்குழுக் கூட்டம் ஆத்தூரில் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய போது, இடத்தை மாற்றி விட்டோம் என அருளும் ஜி.கே.மணியும் சொன்னதும், அப்படியா என்று கேட்டுவிட்டு கடந்து சென்ற காட்சியும் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நடைபெற்ற பாமகவின் நிர்வாக குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ். பிரஸ் மீட்டின் நடுவே, ஜி.கே.மணி ஒரு பேப்பரில் எழுதிக் கொடுக்க, அந்த பேப்பரை பார்த்து ராமதாஸ் படிப்பது போன்ற காட்சிகளையும் அதில் பார்க்க முடிந்தது. அந்த பேப்பரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி அன்புமணி நடத்திய போராட்டம் செல்லாது என ஜிகே மணி கூறவே, ஒருவர் எழுதுவது அந்தக் காட்சியில் பதிவாகி உள்ளது. ஜிகே மணியைப் போல் எம்.எல்.ஏ. அருளும், ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்ததும் காட்சியில் பதிவாகி உள்ளது. பின்னர், பொதுக்குழு குறித்து பேச தொடங்கிய ராமதாஸ், பொதுக்குழு ஆத்தூரில் நடைபெறும் என பேச பின்னாடி இருந்து ஐயா ஐயா ஆத்தூரில் இல்லை, சேலத்தில் என எம்.எல்.ஏ. அருளின் குரல் ஒலிக்க தொடங்கியது. அதனை கேட்டு ஜி.கே.மணியும் தலையாட்ட, சேலத்தில் பொதுக் குழு என அறிவித்தார் ராமதாஸ். பொதுக்குழு வருகிற 28ஆம் தேதி ஆத்தூரில் நடைபெறும் என ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிப்பு வெளியான நிலையில், பொதுக்குழு நடைபெறும் இடம் திடீரென மாறியது எப்படி? அது ராமதாஸுக்கு தெரியாமல் இருந்ததா? என்ற கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.பாமகவில் தந்தை - மகன் பிரிவுக்கு ஜி.கே.மணி தான் காரணம் என அன்புமணி தரப்பினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. ராமதாஸின் செயல்பாடுகளுக்கு பின்னணியில் ஜி.கே.மணி இருப்பதாக அன்புமணியே பல முறை குற்றம்சாட்டிய நிலையில், தற்போது அன்புமணி மீதான ஊழல் வழக்குகள் குறித்து, ராமதாஸ் பேசி இருப்பது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், தான் சொன்னால் ராமதாஸ் கேட்பாரா என்றும், அன்புமணிக்காக பலமுறை பேசிய காரணத்தால் தன்னை ராமதாஸ் திட்டி வருவதாகவும் சேலத்தில் பேட்டி தந்தார் ஜி.கே. மணி. அந்தப் பேட்டியில் அன்புமணி மீதான பாசம் இன்னும் விட்டுப் போகவில்லையா? என்று தன்னிடம் ராமதாஸ் ஆவேசப்பட்டதாக ஜிகே மணி கூறிய போது அருகில் இருந்த எம்.எல்.ஏ. அருளும் அதை ஆமோதித்துப் பேசினார். எதிர்வரும் தேர்தலில் ராமதாசும், அன்புமணியும் சேர்ந்தால், கட்சிக்கு அது பெரும் பலமாக இருக்கும் என்பதோடு மட்டும் அல்லாமல், எந்த நோக்கத்திற்காக கட்சி தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் சிதையாமல் இருக்கும் என்பதே வன்னியர் சமூக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.