news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews விளாத்திகுளம் மாணவி வழக்கு, தர்ம முனீஸ்வரனுக்கு தண்டனை, வரவேற்பு
tv

Also Watch

tv

Read this

விளாத்திகுளம் மாணவி வழக்கு, தர்ம முனீஸ்வரனுக்கு தண்டனை, வரவேற்பு

76 நாட்களில் தீர்ப்பு CASE TIMELINE

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் நடந்த 76 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்தது முதல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது வரை என்ன நடந்தது?

விளாத்திகுளத்தில் விபரீதம்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள கருவேலங்காட்டுக்கு சென்றுள்ளார். இரவு 10 மணியை தாண்டியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த உறவினர்கள் செல்போன் வெளிச்சத்திலும், டார்ச் லைட் வெளிச்சத்திலும் காட்டுப்பகுதியில் தேடி உள்ளனர். கிட்டத்தட்ட 2 மணிநேரம் தேடியும் மாணவி காணாததால், நள்ளிரவு 12 மணிக்கு குளத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால், மாணவி சிறுமி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு குளத்தூர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கருவேலங்காட்டுக்குள் சடலம்
இதனையடுத்து, மகளிர் காவல் நிலையம் சென்ற நிலையில் அங்கு பணியில் இருந்த காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணா, சிறுமியைப் பற்றி தரக்குறைவாக பேசியிருந்தார். அதோடு, புகாரையும் வாங்காமல் அலட்சியம் காட்டினார். இதனிடையே, மறுநாள் மாலை 4 மணியளவில் உடல் முழுக்க நகக்கீறல்களுடன் கருவேலங்காட்டுக்குள் மர்மமான முறையில் மாணவியின் சடலம் கிடந்துள்ளது. அதன்பிறகுதான் போலீசாரே அங்கு வந்துள்ளனர்.

சாலை மறியல் போராட்டம்
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகவும், அப்போது திமிறியதால் நகங்களால் கீறி உள்ளதாகவும், அதன்பிறகு கழுத்தை துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்திருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், நாங்கள் புகார் அளித்தவுடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொடுமை நடந்திருக்குமா? விளாத்திகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீணா சஸ்பெண்ட் செய்யப்படாலும் அவரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும்கோரி உறவினர்கள் கொந்தளித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிக்காத குற்றவாளி, திணறிய போலீஸ்
அதன்பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தியதோடு குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. கிராம மக்கள், மாணவியின் உறவினர்கள், வட மாநில தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தும் 10 நாட்களாக குற்றவாளி கண்ணில் சிக்கவில்லை. குற்றம் நடந்த காட்டுப் பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாதால் காக்கிகளும் துப்பு துலக்க முடியாமல் திணறினர்.

ஒரே ஒரு ஆதாரம்
அதன்பிறகு, மாணவியின் சடலம் மீட்கப்பட்ட காட்டுப்பகுதியில் பதிவான செல்போன் சிக்னலை ஆராய்ந்தனர் போலீசார். அதில் மொத்தமாக ஆயிரத்து 600 செல்போன் சிக்னல் பதிவாக அத்தனையையும் விடாமல் அலசியும் துரும்பளவில்கூட எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே சிறுமியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் மூலம் ஒரே ஒரு ஆதாரம் கிடைத்தது. மாணவியின் நகத்திற்குள் சிக்கி இருந்த சிறு மனித சதை தான் அந்த ஆதாரம். சதை துணுக்கை DNA பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை அடுத்த நகர்விற்கு சென்றது.

சிசிடிவி காட்சியில் சிக்கிய நபர்
இதற்குமத்தியில், அப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றில் சிசிடிவி கேமராவில் ஒருவர் பைக்கில் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பைக் எண்ணை வைத்து அந்த நபர் யார்? என விசாரணை மேற்கொண்ட போலிசாருக்கு அது திருட்டு பைக் என்பது தெரியவந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து அந்த பைக் திருடப்பட்டதும், அந்த உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்து, பைக் திருடனை வட்டம்போட்ட போலீசாருக்கு அது சாயல்குடி பகுதியை சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் என்பதும் அவர்தான் சிறுமியை சீரழித்து கொன்ற படுபாதகன் என்பதும் தெரியவந்தது. அதோடு, மாணவியின் நகத்திற்குள் சிக்கி இருந்த சிறு சதை துணுக்கும் தர்ம முனீஸ்வரனுடையதும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

30க்கும் மேற்பட்ட வழக்குகள்
பைக் திருட்டு, கொலை, பாலியல் புகார் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தர்ம முனீஸ்வரன் மீது நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2020ம் ஆண்டு கோவில்பட்டி அடுத்த கீழ ஈரால் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கிலும் 2022-ம் ஆண்டு தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணி உள்ளார். மூதாட்டி கொலை வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வேறொரு வழக்கில் 2 வாரங்கள் மெய்க்காவல் தண்டனை, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என சிறையிலேயே காலத்தை கழித்துள்ளதும் தெரியவந்தது.

11ஆவது நாள் சிக்கிய குற்றவாளி
”காடாறு மாதம் வீடாறு மாதம்” என்பதுபோல் அடிக்கடி சிறைக்கு செல்வது, ஜாமினில் வெளியே வருவது என இருந்த தர்ம முனீஸ்வரன் மூதாட்டி கொலை வழக்கிலும் ஜாமினில் வெளியே வந்ததோடு, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துவிட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட்டும் வந்துள்ளார். அப்படி, சாயல்குடியில் இருந்து தூத்துக்குடிக்கு நீதிமன்றத்தில் கையெழுத்திட போன போதுதான் காட்டுப்பகுதியில் சிறுமி கண்ணில்பட்டுள்ளார். வரவிருக்கும் வழக்கோடு ”பத்தோடு பதினொன்று” என்ற கணக்கில் மாணவியை நாசம் செய்த தர்ம முனீஸ்வரன் 10 நாட்களாக சிக்காமல் 11 ஆவது நாள்தான் தூத்துக்குடியில் சிக்கி உள்ளார்.

20 நாளில் குற்றப்பத்திரிகை
மார்ச் 20ஆம் தேதி காலை பலத்த பாதுகாப்புடன் தர்ம முனீஸ்வரனை அழைத்துச்சென்ற போலீசார் மாணவியின் சடலம் மீட்கப்பட்ட கருவேலங்காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று நடந்த சம்பவத்தை நடித்து காண்பிக்க வைத்து அதனை வீடியோவாக பதிவு செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார் தர்ம முனீஸ்வரன். தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் சம்பவம் நடந்த 20 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். மே 5 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தர்ம முனீஸ்வரன் 3 முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

76 நாளில் தீர்ப்பு, வரவேற்பு
71 சாட்சிகள், தடயவியல் துறை அதிகாரிகள் 2 பேரிடம் வீடியோ கான்ஃபரன்ஸ் என மொத்தம் 73 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. மே 21 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் சம்பவம் நடந்த 76 நாளில் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு பலரது மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Link
+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா

12
1 hr 12 mins agoshare
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved