கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மயானத்துக்கு செல்ல பால வசதி இல்லாததால், உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை கிராம மக்கள் ஆற்றில் இறங்கி ஆபத்தான வகையில் சுமந்து சென்றனர்.மஞ்சப்புத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அவர்களது மயானம் மணிமுத்தாற்றின் மறுகரையில் அமைந்துள்ளது.பால வசதி இல்லாததால் ஆபத்தான வகையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் உடலையும் ஆற்றில் இறங்கி இடுப்பளவு நீரில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.அதிக நீர் செல்லும் மழைக்காலங்களில் ஆற்றை கடக்க முடியாமல், சடலங்களை சாலையோரம் வைத்து எரியூட்டுவதாக கவலை தெரிவித்துள்ள மக்கள் பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.