மதுரையில் நடைபெறும் தவெக-வின் 2ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள், ரசிகர்கள், பொது மக்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற பகுதியில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், தவெக சார்பில் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.மாநாடு நடைபெறும் பகுதியில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில், நொறுக்குத்தீனி ஆகியன விநியோகம் செய்யப்படுகிறது.இந்த மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த வகையில் முன்கூட்டியே மாநாட்டு திடலுக்கு விஜய் வருவார் என்றும் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் அவர் ரேம்ப் வாக் வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.கூட்ட நெரிசல்; மயக்கம்மதுரை தவெக மாநாட்டுத் திடலில் குவிந்த தொண்டர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 170க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மாநாட்டில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிக வெயில் மற்றும் தலை சுற்றல் காரணமாக, தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், ராட்சத ட்ரோன் மூலமாக மாநாட்டு திடல் முழுவதும் தண்ணீர் தெளிக்கப்பட்டது.தவெக மாநாட்டுக்காக வாகனங்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. தவெக தொண்டர்களால் மதுரை குலுங்கி கொண்டிருக்கிறது.