Also Watch
Read this
By: Manigandan Raja

1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு :
ராஜபாளையம் அருகே 15 தினங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் சுமார் ஒரு மணி
நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாட்கோ காலனியில் 500 குடும்பங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இரண்டு தினங்களுக்கு ஒரு முறை பழக்கத்திற்குரிய உப்பு தண்ணீர் மற்றும் வழங்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், கடந்த 15 நாட்களாக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, இன்று காலை முடங்கியாறு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காலிக் குடங்களுடன் பெண்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய இந்த போராட்டத்தால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள், பக்தர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த வடக்கு போலீசார் பொது மக்களிடம் சமரசம் பேசினர். பழுதான மின் மோட்டார் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இன்று மதியத்திற்குள் தண்ணீர் வழங்கப்படும் என உறுதி அளித்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த இடத்தை கடந்து செல்ல முயன்ற அரசு பேருந்தை பொதுமக்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஊராட்சி துறை ஊழியர்கள் வந்து குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved