விஜயதசமியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஸ்ரீ வனமாலீஸ்வரர் கோயிலில், வித்யாரம்பம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாவது நாள் விஜயதசமி விழாவாக, சரஸ்வதி உள்ளிட்ட அம்மன் கோயில்களில் குழந்தைகளுக்கான கல்வி தொடங்கும் வகையில், ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி மங்களகரமாக கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாலீஸ்வரர் கோயிலில் உள்ள சரஸ்வதி சன்னிதானத்தில், கோயில் குருக்கள் குழந்தைகளின் நாவில் தங்க ஊசியால் எழுதியும், குழந்தைகளின் கை விரல்களை கொண்டு பச்சரிசியிலும், அகர முதல எழுத்துகளை எழுத செய்து, குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர். விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஏடு தொடங்கினால் அவர்களின் வாழ்வில் கல்வி செல்வம் பெருகும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர், குழந்தைகளுடன் வருகை தந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.