தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு அடுத்த கனிராவுத்தர் குளம் அருகே அரசின் டாஸ்மாக் மது பான விற்பனை கடை செயல்படுகிறது. இந்த கடையில் 12 மணி முதல் 10 மணி வரை அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், மற்ற நேரங்களில் கடையை ஒட்டி உள்ள இடங்களில், கூடுதல் விலைக்கு மதுபானம் தங்கு தடையின்றி, 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையை மாற்றக்கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த எட்டு மாதங்களை கடந்தும் இதுவரை டாஸ்மாக் கடை மாற்றப்படாமல் அதே இடத்தில் நிரந்தரமாக செயல்படுகிறது. இந்நிலையில், பொது மக்கள், விசிக மாவட்ட செயலாளர் சாதிக் உள்ளிட்டோர், கடையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடைக்குள் நுழைய முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து, கடையில் மது அருந்தி கொண்டிருந்தவர்களை வெளியேற்றினர். கடையை மூடும் வரை, இங்கிருந்து செல்ல மாட்டோம் என டாஸ்மாக் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் உடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.