சிவகங்கை மாவட்டத்தில், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின்போது விதிமீறிய வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவிற்கு, விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதாக 30 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் இருந்தும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல், அரசு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், பலரும் விதிகளை மீறி பயணித்தனர். இதனையடுத்து, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதாக 30 வாகனங்கள் மீதும், அதில் பயணம் செய்து ஆபத்தான முறையில், பொது மக்களை அச்சுறுத்தியதாக, 28 பேர் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீடியோ, சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் வழக்குகளில் தொடர்புடைய 30 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.