Also Watch
Read this
By: Manigandan Raja

வீட்டில் கொள்ளை முயற்சி :
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் விஸ்வநாத நகரைச் சேர்ந்தவர் தேவராஜ் (80). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி செண்பகவல்லி (78). இவர்களது மகள் சுமத்ரா (40).
சென்னையில் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மகளை பார்ப்பதற்காக தேவராஜூம், செண்பகவல்லியும் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்று விட்டனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முகமூடி அணிந்த மர்மநபர்கள் 3 பேர், தேவராஜ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அங்கிருந்த பீரோக்களை உடைத்து நகை மற்றும் பணத்தை தேடி உள்ளனர். ஆனால் வங்கி லாக்கரில் நகை, பணம் வைக்கப்பட்டு இருந்ததால் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த பொருட்களை சிதறடித்தும், வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் நாலாட்டின்புத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த கொள்ளையர்கள் பக்கத்து வீட்டைச் சேர்ந்த விக்னேஷ் (46) என்பவரின் பைக்கை திருடிக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
தகவல் அறிந்து நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி
வருகின்றனர். இதுதொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குபதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து ஹாயாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாலாட்டின்புத்தூர் விஸ்வநாத நகர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. குற்றவாளிகள் இதுவரை பிடிபடவில்லை. இந்நிலையில் மீண்டும் அதேபகுதியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையை பீதியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved