Also Watch
Read this
By: Web Team

சென்னையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை, அவரது மகன் அன்புமணி சந்தித்து நலம் விசாரித்தார்.
உடல் நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள நிலையில், அக்கட்சி நிறுவனரான ராமதாஸ், கிராமம் தோறும் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
அதற்கான தேதி குறித்து விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில், ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். இதய பரிசோதனை செய்வதற்காக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் பாமகவினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சை முடிந்து, இன்று மதியம் வீடு திரும்புவார் என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்தார்.
இதனிடையே, தனியார் மருத்துவமனைக்குச் சென்ற அன்புமணி, தந்தை ராமதாஸின் உடல்நலன் குறித்து நலம் விசாரித்தார். பல நாட்களாக இருவரும் சந்தித்து கொள்ளாமல் இருந்த நிலையில் மருத்துவமனையில் தந்தையை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அன்புமணி.
தந்தைக்கு இதய குழாயில் அடைப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக அன்புமணி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved