நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், மாரியம்மன் கோயில் திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான, கம்பம் விடும் விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து, கம்பம் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பழக்கடை சந்திப்பில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சின்ன மாரியம்மன் கோயிலில் இருந்தும், அழகு முத்து மாரியம்மன் கோயிலில் இருந்தும், கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஒரே இடத்தில் சேர்ந்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழி நெடுகிலும் பக்தர்கள் திரண்டு, உப்பு, மிளகு இரைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஈரோடு சாலையில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் கம்பம் விடப்பட்டது.கம்பத்தின் முன் அம்மன் வேடமணிந்த பக்தர்கள் மற்றும் பல்வேறு கடவுள் வேடமணிந்த பக்தர்கள் நடனமாடியபடி வந்தனர். கம்பத்துடன் வந்த ஒரு சிலரைத் தவிர, யாரும் தெப்பக் குளக்கரைக்கு அனுமதிக்கப்படவில்லை. குளக்கரையை சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று, கம்பம் விடும் நிகழ்ச்சியை கண்டு, சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோயில்களில் இருந்தும், கம்பங்களும் கும்பங்களும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தெப்பக்குளத்தில் விடப்பட்டது. கம்பம் விடும் நிகழ்வை ஒட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.