திமுகவின் வரலாறு தெரியாத சிலர், மிரட்டிப் பார்ப்பதாகவும், ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல், ஒரே திமுக தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி உள்ளார். திமுகவின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அறிவு திருவிழாவை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முற்போக்கு புத்தகக் கண்காட்சியையும் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.காலத்தின் நிறம் கருப்பு - சிவப்பு என்ற நூலையும் வெளியிட்ட முதலமைச்சர், கட்சியை தொடங்கிய உடன் அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று அறிவிப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் திமுக அல்ல என்றும் கூறினார். சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், திமுகவின் 75ஆவது ஆண்டை ஒட்டி நடைபெற்ற அறிவு திருவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை. இவ்விழாவிற்கு அறிவு திருவிழா என்று துணை முதல்வர் உதயநிதி, பொருத்தமான பெயர் வைத்துள்ளார். ஏதோ கட்சியை தொடங்கினோம், அடுத்த முதல்வர் நான் தான் என்று அறிவித்தோம் என்று, ஆட்சிக்கு வரவில்லை.திமுகவின் தலைவர்களில் இருந்து, கடைக்கோடி தொண்டர்கள் வரை சுற்றி சுழன்று பணியாற்றினார்கள். திமுக உழைத்த உழைப்பு சாதாரணமானது அல்ல. வரலாறு தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள். இன்று சில அறிவிலிகள், திமுகவை போல் வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். திமுக போல் வெற்றி பெற, திமுக போல் அறிவும், உழைப்பும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல் ஒரு திமுக தான். இப்படி ஒரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது.ஒடுக்குமுறையில் இருந்து, மக்களை மீட்ட இயக்கம் திமுக என்று ராகுல்காந்தி கூறி இருக்கிறார். பீகார் மாநிலத்தில் முதல்வராக விரைவில் வர இருக்கிற தேஜஸ்வி யாதவ், திமுகவை வரலாறாக பார்க்கிறார். மாநில கட்சியான திமுகவை அகில இந்திய தலைவர்களும் பாராட்டி, கட்டுரை எழுதியுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் திமுகவை வீழ்த்த நினைக்கின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏன் அவசரம் அவசரமாக நடத்த வேண்டும்?தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை நடத்துகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்த போதிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏன் நடத்துகின்றனர்? கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் கமிஷன் மூலம் வீழ்த்த முயற்சி நடக்கிறது. களத்தில் வேலை செய்யும் திமுகவினர், போலி வாக்காளர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் திமுகவினர் களத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதையும் பாருங்கள் - CM Stalin Speech | "நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்" - சூசகமாக அடித்த முதல்வர் | DMK MK stalin