Also Watch
Read this
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோயிலின் பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வெகு விமரிசையாக நடைபெற்றது.

மயிலம் மலையில்...
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள மயிலம் மலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில், பங்குனி உத்திர விழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனையும், இரவில் வெவ்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் மலைவல காட்சியும் நடந்தது.

தேரோட்டம் கோலாகலம்
திருக்கல்யான உற்சவமும், வெள்ளி குதிரை வாகனத்தில் மலைவல காட்சியும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக, இன்று மார்ச்31ஆம் தேதி, விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு மூலவரான வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் தங்க கவச அலங்காரத்தில் மூலவர் காட்சி அளித்தார். விநாயகரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து உற்சவ விநாயகரும், உற்சவ முருகப் பெருமானும் அலங்கரிக்கப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டனர். பின்னர் மேள தாளத்துடன் சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானும் அமர வைக்கப்பட்டனர்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் விநாயகர் தேரையும், முருகர் தேரையும் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேர் மலையை சுற்றி வந்தபோது, விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த பொருட்களை தேர் மீது வாரி இறைத்தனர். மேலும், பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா... என்று பக்தி கோஷமிட்டனர்.

இதில், விழுப்புரம், கடலூர், புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved