மயிலாடுதுறை, மாயூரநாதர் ஆலய துலா உற்சவத்தையொட்டி மயிலம்மன் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை ஒட்டி, மாயூரநாதர் ஆலய சன்னதியில் அபயாம்பிகை அம்மன், மயில் உருவில் சிவ பெருமானை பூஜிக்கும் நிகழ்வும், தொடர்ந்து சுவாமி அம்பாள் மாயூரதாண்டவம், கெளரிதாண்டவம் ஆடிய நிகழ்வும் நடைபெற்றது. பின்னர், நடராஜர் சன்னதியில் மயில் உருவில் கொளரி தாண்டவக்காட்சியும், அபயாம்பிகை அம்மன் சாபவிமோசனம் நீங்கி அம்பிகை உருவம் கொண்ட நிகழ்வும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகா தீபாராதனை, சோடச தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், கலந்து கொண்டு மயிலம்மன் பூஜையை கண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 13ஆம்தேதி திருக்கல்யாண உற்சவம், 15ஆம்தேதி பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருத் தேரோட்டம், 16ஆம்தேதி புகழ்பெற்ற கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவுள்ளது