திருப்பத்தூரில், இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். உள்ளூர் மக்களும் நீர்வீழ்ச்சியின் அருகே செல்ல வேண்டாம் என்று, மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில், ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் அமைந்துள்ளது புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயிலும் உள்ளதால், தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, பெங்களூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வந்து வழிபட்டு, நீர்வீழ்ச்சியில் குளித்து விட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் வரலாறு காணாத அளவிற்கு பாறை முழுவதும் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் குறையும் வரை தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் பாருங்கள் - Jalagamparai Falls | ஆக்ரோஷமான ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை