சென்னை அருகே தாழம்பூர், சச்சிதானந்தபுரம் பகுதியில், இரவு நேரத்தில், பைக், கார்களில் இருந்து பெட்ரோல் மற்றும் பேட்டரிகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓஎம்ஆர் சாலையில், தாழம்பூர் பகுதியில் தனி வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஏராளமாக உள்ளது. இங்கு நிறுத்தப்படும் பைக் மற்றும் கார்களில், இருந்து பெட்ரோல் மற்றும் பேட்டரிகளை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் திருடிச் செல்கின்றனர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். குடியிருப்புகளில் இருக்கும் இன்வெர்ட்டர்களையும் இந்த மர்ம கும்பல் இரவு நேரத்தில் விட்டு வைக்காமல் திருடி செல்கின்றன. சச்சிதானந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் காம்பவுண்ட் சுவர்களில் ஏறிக் குதித்து இந்த மர்ம நபர்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். இதுகுறித்து, போலீசாரிடம் பல முறை தெரிவித்தும் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதேனும் நேரிடுவதற்கு முன்பாக, இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இரவு நேரத்தில் திருடி செல்லும் மர்ம நபர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.