"ஒருத்தன ஏமாத்தனும் நா அவன் கிட்ட கருணையை எதிர்பார்க்க கூடாது, அவன் ஆசையை தான் தூண்டனும்" என சதுரங்க வேட்டை சினிமா பாணியில் பொது மக்களை ஏமாற்றி பல லட்சங்களை சுருட்டிக் கொண்டு சென்ற பலே ஆசாமி தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரத்தில் ஸ்ரீ பாலாஜி எண்டர்பிரைசஸ் E பைக் & எலக்ட்ரானிக்ஸ் மல்டி பிராண்ட் ஷோரூம் எனும் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களாக இயங்கி வந்துள்ளது.ஷோரூமில் புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ரூ.70ஆயிரம் மதிப்புள்ள வாகனத்தை ரூ.40ஆயிரம் கட்டினாலே பாதி விலைக்கு தரும் ஆஃபர் தங்களிடம் உள்ளதாக ஆசை வார்த்தை கூறி சுமார் 250க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.40ஆயிரம் ரொக்க பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.பணம் கட்டிய நாளில் இருந்து மூன்று தினங்கள் வாகனம் தரப்படும் என்றும் வேறு சிலருக்கு 15 தினங்களில் புதிய வாகனம் தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் . இதனையடுத்து பணத்தை கட்டிவிட்டு காத்திருந்த நிலையில் அன்று மாலைக்கு பிறகு மூன்று நாட்களுக்கு விடுமுறை என அறிவிப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். அதற்கு பிறகும் கடை திறக்காத நிலையில் அக்கடையின் உரிமையாளரை சிலர் அணுகிய போது, ஷோரூம் வைப்பதற்காக முன்பணமாக ரூ.50ஆயிரம் மட்டுமே அளித்துள்ளதாகவும், கடந்த இரு மாதங்களாக எவ்வித வாடகையும் தரவில்லை என்றும்,அந்நபர் அளித்த ஆதாரங்கள் அனைத்தும் போலியானவை என்றும் பல உண்மைகள் வெளிவரவே பலே ஆசாமியின் மோசடி வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதனையடுத்து தாங்கள் ஏமாந்து விட்டோம் என்று அறிந்து செய்வதறியாது திகைத்து போயுள்ளனர் அப்பாவி மக்கள். இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள நபர் மீது பாதிக்கபட்ட மக்கள் காஞ்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.