Also Watch
Read this
சென்னையில், வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் நீட்டிப்புத் தடத்தில் ரயில் சேவை, இன்று காலை தொடங்கியது.

தென்சென்னை மக்களுக்கு...
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில்கள் இயக்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையிலான 43 ஜோடி ரயில் சேவை பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தென்சென்னை மக்கள், நகரின் எந்தப் பகுதிக்கும் எளிதாக பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும், செயல்பாட்டு கட்டுப்பாடு காரணமாக, ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில் நிற்காது என்றும், தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. ஆதம்பாக்கத்தில் ரயில்கள் நின்று செல்லத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட...
வேளச்சேரி - பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை, இன்று மார்ச் 14ஆம் தேதி, அதிகாலை முதல் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய வழித்தடம் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணத்தை மேற்கொள்ள முடிவதாக பயணிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். சென்னையில் கடந்த 1997ஆம் ஆண்டில் இருந்து, கடற்கரை முதல் வேளச்சேரி வரை, உயர்நிலை பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 100 ரயில் சேவைகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வரை பயணிக்கின்றனர். வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான 4.5 கி.மீ. தொலைவுக்கு ரயில் சேவையை நீட்டிக்கும் பணி, கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கியது.

96 ரயில்களில்...
ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான வழக்கு உள்ளிட்டவற்றால் பணிகள் முடங்கின.
கடந்த 2022ஆம் ஆண்டு நில பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதை தொடர்ந்து, பணிகள் தொடங்கின. தற்போது, 167 தூண்கள் அமைத்து ரயில் பாதையும் அமைக்கப்பட்டு, மின்சார இணைப்பும் தரப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, ரயில்களை இயக்குவதற்காக ‘தற்காலிக அதிகாரபூா்வ சான்றிதழை’ ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையா் வழங்கினார். இந்த நிலையில், பணி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வேளச்சேரி - பரங்கிமலை இடையே இன்று அதிகாலை 5 மணி முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழித்தடத்தில் கடற்கரை - பரங்கிமலை இரு மாா்க்கத்திலும் 86 ரயில்கள் இயக்கப்படும். கடற்கரை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 4 ரயில்கள், பரங்கிமலை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 6 ரயில்கள் இயக்கப்படும். ஆக மொத்தம் 96 ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில் பயணிகள் ஹேப்பி...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved