விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பைக் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அழகுபாண்டி என்பவர், கடும் மன உளைச்சலில் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நபருக்கும், பைக் திருட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறிய உறவினர்கள், விசாரணையிலிருந்து விடுவிக்க போலீசார் பணம் கேட்டதன் காரணமாகவே அழகுபாண்டி தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கு தூண்டியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காரியாபட்டி முக்குரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் அழகுபாண்டி. கடந்த ஜூலை மாதம் காரியாபட்டி பகுதியில் நடந்த பைக் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரிடம் அழகுபாண்டி பேசிக் கொண்டிருக்கும் சிசிடிவி காட்சிகள் உள்ளதாக கூறிய காரியாபட்டி போலீசார், இது தொடர்பாக கடந்த 24 ஆம் தேதி அழகுபாண்டியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பைக் திருட்டுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று, அழகுபாண்டி கூறிய நிலையில், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என போலீசார் அழகுபாண்டியனிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், அழகுபாண்டியனின் ஊரை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் சாட்சி சொன்ன பிறகே அவரை போலீசார் விடுவித்ததாக தெரிகிறது. தொடர்ந்து அர்ஜூனன் என்பவர், 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் விசாரணைக்கு அழைக்கமாட்டோம் என காரியாபட்டி போலீசார் சொன்னதாக கூறி, அழகு பாண்டியனிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அழகு பாண்டி கடந்த வெள்ளிக்கிழமை மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அழகுபாண்டி சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனையடுத்து, அழகுபாண்டியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது உறவினர்கள் காரியாபட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அங்கு வந்த பொறுப்பு காவல் ஆய்வாளர் சங்கர், அழகுபாண்டியின் உறவினர்களிடம் கால அவகாசம் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சமாதானத்தை ஏற்காத ஒரு சிலர், காரியாபட்டி முக்குரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் ஒரு சிலர் அவ்வழியாக சென்ற அரசு பேருந்தின் மீது கல் வீசியதில் பேருந்தின் கண்ணாடி லேசாக சேதமடைந்ததது. அழகு பாண்டியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால் அருப்புக்கோட்டை சாலையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் அங்கு வந்த திருச்சுழி டி.எஸ்.பி தலைமையிலான போலீசார், தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.