Also Watch
Read this
By: Manigandan Raja
மதுரையில் நடந்த காங்கிரஸ் கூட்டம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறிய காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக குறித்து இத்தனை நாட்களாக பேசாதவர்கள் தேர்தலின் போது மட்டும் பேசுவது ஏன்? என வினவியுள்ளார். மேலும், காங்கிரசில் கார்கே, ராகுல் காந்தியை விட பெரிய ஆட்கள் யாரேனும் உள்ளனரா? என மாணிக்கம் தாகூருக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில்... "எனக்குத் தெரியாது"
கூட்டணி குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குறித்துப் பேசவே டெல்லி செல்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது;
மதுரை மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது.

பெரிய ஆள்கள் இருக்கிறார்களா?
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடந்த 17ஆம் தேதி எங்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியது. யாரும் பொதுவெளியில் கூட்டணியைப் பற்றி பேசக் கூடாது என்று ராகுல், கார்கே, வேணுகோபால் ஆகியோர் சொல்லியிருக்கின்றனர். அவர்களைவிட பெரிய ஆள்கள் இருக்கிறார்களா? என்று எனக்கு தெரியவில்லை.

முரணாக யார் நடந்தாலும் அது தவறுதான்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலை மதிப்பவன் நான். காங்கிரஸ் கமிட்டி என்ன சொல்கிறதோ அதன்படி அரசியல் பயணத்தைத் தொடர்கிறோம். கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு அமைத்து அவர்கள் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். மாணிக்கம் தாகூர் பேசியது தொடர்பாக கூப்பிட்டிருக்கிறார்கள், நாங்கள் அதுபற்றி ஆலோசனை செய்வோம். அகில இந்திய காங்கிரஸ் வழிகாட்டுதலுக்கு முரணாக யார் நடந்தாலும் அது தவறுதான்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved