Also Watch
Read this
By: Manigandan Raja

காயத்தால் தொடரில் இருந்து விலகுவதாக கோலி அறிவிப்பு :
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடருக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடித்திருந்தார். ஆனால், ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடியபோது, அவருக்கு தொடை பகுதியில் தசையில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்து ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே ஆவதால் ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். எனவே, விராட் கோலிக்கு பதிலாக ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சச்சின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி :
இந்திய கிரிக்கெட் அணியின் மிக இளம் வீரர் என்கிற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்து சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 16 வயதில் இந்திய அணியில் அறிமுகமான நிலையில், வைபவ் சூர்யவன்ஷி 15 வயதில் அறிமுகமாக உள்ளார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய டி20 அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்கும் மிக இளம் வீரர் என்கிற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
சூர்யகுமாரிடம் இருந்து டி-20 கேப்டன் பதவி பறிப்பு :

இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி சூர்யகுமார் யாதவிடம் இருந்து பறிக்கப்பட்டது குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். இந்த முடிவு கடினமானது என்றாலும், அடுத்து வரும் டி-20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.
அதே சமயம் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அணியை வழிநடத்த அவர் தகுதியானவர் என்றும் அகர்கர் விளக்கமளித்தார்.
18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி :

ஜப்பானில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது. அரையிறுதியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது.
இந்த போட்டியில், ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இறுதியில் 4-க்கு 1 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. அதேபோல, ககாமிஹாரா நகரில் நடைபெற்ற 3-வது இடத்திற்கான போட்டியில், இந்திய மகளிர் ஹாக்கி அணி கொரியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் :

நார்வே செஸ் தொடரில் இந்திய அணியின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். ஓஸ்லே நகரில் நடைபெற்ற கிராண்ட் மாஸ்டர்களுக்கான செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் வின்செண்ட் கெய்மரை பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.
இறுதி நாளில் 15 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் தொடங்கிய பிரக்ஞானந்தா,18 புள்ளிகளுடன் வெற்றி பெற்றார். ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை 2 முறை வீழ்த்தியதாக பிரக்ஞானந்தா, நார்வே செஸ் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை தன் வசமாக்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved