அண்மைக்காலமாக ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் அச்சத்துடன் பயணத்தை மேற்கொள்ளும் நிலை அதிகரித்துள்ளதால் சிதம்பரம் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் காவல் ஆய்வாளர் அருண், பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பானங்களையோ அல்லது தின்பண்டங்களையோ வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் ரயில் பயணத்தின் போது நகைகளை அணிந்து கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்வதை தவிர்க்க வேண்டும். அதே போன்று சந்தேகப்படும்படி யாராவது தங்கள் அருகில் வந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.குறிப்பாக பெண்களுக்காக இணைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டியில் பெண் பயணிகள் மட்டும் பயணம் செய்ய வேண்டும். அதிகாரிகள் ஊழியர்கள் எனக் கூறிக்கொண்டு யார் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியில் வந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தகவல் தெரிவிக்கும் பெண்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் காவல் ஆய்வாளர் அருண் பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதில் கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் என திரளாக பங்கேற்று அவர்களது சந்தேகங்களை கேட்டறிந்து சென்றனர். குறிப்பாக பெண்களுக்காக 9962500500 என்ற எண் கொண்ட whatsapp குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தகவல்களை உடனடியாக பரிமாறி பிரச்சனையிலிருந்து தீர்வு காண்பதற்கு பெண் பயணிகள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.