Also Watch
Read this
ஆட்சி அமைக்க தனிப் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 118 எம்எல்ஏக்கள் குறித்த தகவலை ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் தெரிவிக்காததால் திட்டமிட்டபடி, மே 7ஆம் தேதி, முதல்வராக விஜய் பதவியேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

108 இடங்களில் தவெக வெற்றி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும், விஜய் வெற்றி பெற்றார். இதில், ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்தாக வேண்டும். இந்நிலையில், தவெக தனிப்பெரும் கட்சியாக சாதித்து உள்ளது. இதையடுத்து, தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக விஜய் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
இதனை அடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு விஜய், இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், நடந்து முடிந்த தேர்தலில் தவெக 35% வாக்குகளை பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரி இருந்தார். ஆட்சி அமைக்க ஆதரவு தருபவர்கள் யார் யார்? என்ற விவரத்தை அளிக்குமாறு விஜய்க்கு, ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆளுநர் சொன்ன பதில்
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், “பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அது குறித்த விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் அடிப்படையில் எனது செயல்பாடு இருக்கும்” என்று கூறி இருந்தார். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்த விஜய், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சமர்ப்பித்தார். போதிய உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது குறித்த விவரத்தை அவர் கூறவில்லை என தெரிகிறது. இதனால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தவெகவின் பலம் என்ன?
காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக தரப்பு கோரி இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் தனது ஆதரவை உறுதிப்படுத்தியது. அக்கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனினும், மற்ற மூன்று கட்சிகளும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. அக்கட்சிகள் தலா 2 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளன. அவற்றின் ஆதரவு உறுதியானால் பெரும்பான்மை பலம் இருப்பதற்கான ஆதாரத்தை ஆளுநருக்கு தவெக தரப்பு அளிக்க முடியும். ஆகவே, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் திட்டமிட்டபடி மே 7ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுமா? என்ற விவாதம் எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved