news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தவெக தலைவர் விஜய் முன் நிற்கும் பெரும் சவால்கள்
tv

Also Watch

tv

Read this

தவெக தலைவர் விஜய் முன் நிற்கும் பெரும் சவால்கள்

நம்பிக்கை, நேர்மை, எதிர்பார்ப்பு

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளைக் கூட நிறைவு செய்யாத தமிழக வெற்றிக் கழகம், 2026 தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிக இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றத் தயாராகி வரும் நிலையில், அரசு உயர் அதிகாரிகள் மட்டத்தில் அணி மாறும் படலம் தொடங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ் நாட்டில் ஆட்சியை பிடித்திருக்கும் விஜய்க்கு, அதிகாரிகள் யார் யார் என அடையாளம் கண்டு ஆட்சியை வழி நடத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அமைக்கும் விஜய்க்கு முன்பாக இருக்கும் நிர்வாக சவால்கள் என்ன? சவால்களை சாதகமாக மாற்றுவது எப்படி?

விஜய் மீது நம்பிக்கை
யாருமே எதிர்பார்க்காத வகையில், அரசியலுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆன விஜய்க்கு, ஆட்சியை தூக்கிக் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு. 75 வருட கட்சி, 50 வருட கட்சியை பின்னுக்குத் தள்ளி பெருவாரியான வாக்கு சதவீதத்தை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி என்பதை தாண்டி விஜய் மீது பெரும் நம்பிக்கையை வைத்து மக்கள் வாக்கு அளித்திருக்கிறார்கள் என்பது கள நிலவரம் உணர்த்தும் செய்தியாக இருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய இடத்தில் இருக்கும் விஜய்க்கு, ஆட்சியை வழிநடத்துவதில் இருக்கும் நிர்வாக சிக்கல்களை கவனமாக கையாள வேண்டிய பொறுப்பும் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த பொறுப்பில் முக்கியமான விஷயமே அதிகாரிகளை கையாள்வது தான்.

எல்லாமே அதிகாரிகள் தான்...
பத்து ஆண்டுகளுக்கு பிறகு 2021 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த போது, பெரும் எழுச்சியே இருந்தது. ஆட்சிக்கு வந்ததும் மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல் கையெழுத்து போட்டது தொடங்கி ஆட்சியின் முதல் பாதி சுமூகமாக தான் சென்றது. ஆனால், போக போக திமுக அரசுக்கு எதிரான மன நிலை பரவ தொடங்கியது. அரசு ஊழியர்கள், செவிலியர்கள், ஆசிரியர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்றாததும், தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியவர்களை திமுக அரசு கையாண்ட மோசமான விதமும் பெரும் அவப்பெயராக மாறியது. இதற்கெல்லாம் முக்கிய காரணமே சில அதிகாரிகள் தான். சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடியது தான் திமுக ஆட்சி மீதான அவப்பெயரை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்தது.

சுதாரிக்க விடவில்லை
அதிகாரிகள் தான் ஆட்சியை நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்த போதும், திமுக தலைமை சுதாரிக்கவில்லை என்பதை தாண்டி சுதாரிக்கவிடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். திமுகவின் மேல் மட்டத்தை கைக்குள் போட்டுக் கொண்டு, ஆட்சிக்கு ஆதரவான அலை இருப்பது போல அதிகாரிகள் மாயையை உருவாக்கியது, தற்போது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை
திமுக ஆட்சி வீழ்ந்ததற்கு முக்கிய காரணமே சட்டம் ஒழுங்கு பிரச்சனை தான். கிராமங்கள் வரை ஊடுருவிய போதைப் பொருள் நடமாட்டம், அதனால் நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் என தினம் தினம் செய்திகள் வந்த போதும் காவல்துறை, உளவுத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சில டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி மட்டத்திலான அதிகாரிகள் கனவு உலகத்திலேயே திமுக மேலிடத்தை வைத்திருந்தனர். ஸ்ரீமதி மரணத்தில் நிகழ்ந்த கலவரம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், அஜித்குமார் லாக் அப் மரணம், கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடு, ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் முதல்வரின் கான்வாய் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது, ரெகுலர் டிஜிபி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தியது என பல விஷயங்களில் காவல்துறையின் மேல்மட்ட அதிகாரிகள் கோட்டை விட்டு திமுகவுக்கு அவப்பெயரை தேடித் தந்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதிகாரிகள் தான் காரணம்
காவல்துறை அதிகாரிகள் தான் இப்படி என்றால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் கிட்டத்தட்ட ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் போல ஆட்சியை நடத்திக் கொண்டிருந்ததும் கடுமையான பின் விளைவுகளை தேடி தந்திருக்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வை நடத்த முடியாமல் ரத்து செய்தது உள்ளிட்ட நிர்வாக சூழல் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதிக்க காரணமாக அமைந்தது. மேலும், திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் கீழ்மட்டம் வரை சென்று சேராமல் இருந்ததற்கும் அதிகாரிகள் தான் காரணம் என சொல்லப்பட்டது.

அணி மாறும் படலம்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சி வீழ்த்தப்பட்டதற்கு காரணமாக இருந்த சில ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தவெக தலைவர் விஜய் தரப்பிற்கு காய் நகர்த்த தொடங்கி இருக்கிறார்களாம். ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புக்கு வரும் வகையில் தற்போதே
சில அதிகாரிகள் அணி மாறும் படலத்தை தொடங்கி இருப்பதாக சொல்கிறார்கள். தங்களுக்கு தெரிந்த வழிகளில் காய் நகர்த்தி தவெகவின் மேல்மட்டத்தை நம்ப வைக்கும் வேலைகளில் ஈடுபட அந்த அதிகாரிகள் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகளே கூடு விட்டு கூடு பாய்வது போல தவெக தலைவர் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டு நீலாங்கரை இல்லத்தில் முகாமிட தொடங்கி இருக்கிறார்களாம்.

கவனம் தேவை
திமுக ஆட்சியில் ஏக போக பதவி, அதிகாரத்தை அனுபவித்த அதிகாரிகள், அரசியல்வாதிகளை போல தற்போது தவெக ஆட்சியிலும் அதிகாரம் செலுத்த வேண்டும் என அணி மாற தீவிரம் காட்டி வருகிறார்களாம். இந்த செய்தி காக்கி வட்டாரத்திலும், ஐ.ஏ.எஸ். ஆபீசர் வட்டத்திலும் றெக்கை கட்டி பறக்கிறதாம். ஏற்கனவே குறிப்பிட்ட சில டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி மட்டத்திலான அதிகாரிகளின் எல்லையற்ற ஆதிக்கம் காரணமாக பெரும் மன உளைச்சலில் தவித்த கீழ் மட்ட அதிகாரிகள், இந்த செய்தியை கேட்டு அச்சத்தில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படும் அதிகாரிகள் ஆட்சி மாறினாலும் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதின் மூலம் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பதால், தவெக தலைவர் விஜய்யும் கவனமாக காய் நகர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கவனமாக கையாள வேண்டும்
மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் ஆட்சிக்கு வந்தாலும், அதிகாரிகள் தான் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். ஆகையால், தவெக தலைமையிலான ஆட்சியில் எந்தெந்த அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? யார் யாரை எங்கே வைக்க வேண்டும்? நேர்மையான அதிகாரிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை தவெக தலைவர் விஜய் கவனமாக கையாள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

நம்பிக்கை, நேர்மை, எதிர்பார்ப்பு
மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய், ஆண்டுக்கு 6 சிலிண்டர் என பல திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்திருக்கும் தவெக தலைவர் விஜய், தன்னை சுற்றி எந்தெந்த அதிகாரிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் கவனமாக செயல்பட்டால் மட்டுமே ஆட்சியை எந்த அவப்பெயரும், கரும் புள்ளியும் இல்லாமல் வழிநடத்த முடியும் என்பதே உண்மை. கடும் விமர்சனங்கள், ஏளனங்களை வென்று ஆட்சியை பிடித்திருக்கும் தவெக தலைவர் விஜய், மக்களின் நம்பிக்கையை தக்க வைக்க, நம்பிக்கைக்குரிய நேர்மையான அதிகாரிகளை தன் பக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே மக்களின் ஆசையாகவும் உள்ளது.

Related Link
திட்டமிட்டபடி விஜய் பதவி ஏற்பாரா? புதிய சிக்கல்

திட்டமிட்டபடி விஜய் பதவி ஏற்பாரா? புதிய சிக்கல்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காலம் பதில் சொல்லும் - டி.ஆர்.பாலு அறிக்கை

3
11 mins agoshare
திமுக வெளியிட்ட பரபரப்பு செய்திbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved