தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி; வழுக்கம்பாறை, மயிலாடி கன்னியாகுமரி, மணக்குடி, மணவாளபுரம், புத்தளம், தெங்கம்புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. புத்தளம் பகுதியில், மழைநீர் ஆறாக ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட பெத்த பெருமாள் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பரவலாக பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக, கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், திடீரென காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. பல்வேறு கிராமங்களில் பெய்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. திண்டுக்கல்; கொடைக்கானலில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. காலை முதல் லேசான பனி மூட்டத்துடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் நண்பகல் நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மூஞ்சிக்கல், பேருந்து நிலையம், அண்ணாசாலை, ஏரிசாலை, பாம்பார் புரம் உள்ளிட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. தொடர்ந்து 3 நாட்கள் பெய்து வரும் மழையால், மலைப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.தென்காசி; மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், பெய்து வரும் தொடர் சாரல் மழையால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல் மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக, தற்போது குற்றாலம் பகுதியில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது, சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்