தமிழ்நாட்டில், சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்கு குறி வைத்து அரசியல் கட்சிகள் போட்டி போட்டு கிறிஸ்துமஸ் விழா நடத்தி வரும் நிலையில், அந்த வாக்குகள் யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. MGR காலத்தில் இருந்து அதிமுக பக்கம் இருந்த சிறுபான்மை வாக்குகள், திமுக பக்கம் சென்றது ஏன்? சிறுபான்மை வாக்குகளை தக்க வைக்க திமுக கையாளும் யுக்தி என்ன? திமுகவுக்கு போட்டியாக விஜய் களத்தில் இறங்கியிருப்பது, போட்டியை இன்னும் சுவாரசியமாக்கியுள்ளது.புதிதாக கட்சிகள் அறிமுகமாகும் போது, அரசியல் களம் பரபரப்பாக இருப்பது வழக்கம் என்றாலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்க முக்கிய காரணமே விஜய். விஜய்க்கு கூடும் கூட்டத்தை வைத்து, யாருடைய வாக்குகளை விஜய் பிரிப்பார் என்ற விவாதங்கள் அரங்கேறி வரும் நிலையில், இன்னொரு பக்கம் இத்தனை ஆண்டுகளாக அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிறுபான்மை வாக்குகள் யார் பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில், சுமார் 44 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் என்ற நிலையில், தமிழக அரசியலிலும் கிறிஸ்தவ வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிக்கும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என சேர்த்து 15 சதவீதம் அளவுக்கு சிறுபான்மை வாக்குகள் இருக்கின்றன.ஆகவே, ரம்ஜான் விழாவை போல, கிறிஸ்துமஸ் விழாவையும் திமுக, அதிமுக, த.வெ.க. கட்சிகள், போட்டி போட்டு நடத்தி முடித்து உள்ளன. கடந்த 18ஆம் தேதி அதிமுகவும், 20ஆம் தேதி திமுகவும், 22ஆம் தேதி த.வெ.க.வும் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தியிருக்கும் நிலையில், கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் முதன் முறையாக கிறிஸ்துமஸ் விழாவை, விஜய் நடத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த சூழலில், சிறுபான்மை சமூகத்தினருக்காக, மூன்று கட்சிகளும் என்னென்ன குரல் கொடுத்து இருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்துத்துவா கோட்பாடு காரணமாக, சிறுபான்மை மக்களுக்கு பாஜக மீது இயல்பாகவே ஒவ்வாமை இருக்கும் நிலையில், அந்த எதிர்ப்பை கூர்மைப்படுத்தி வரும் திமுக, CAA, முத்தலாக், வக்ஃபு வாரிய திருத்த சட்டம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு விரோத சட்டங்களை கடுமையாக எதிர்த்தது.அதே போல, சிறுபான்மை மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகளும் திமுக அரசு செய்து கொடுத்திருக்கிறது. இஸ்லாமிய அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தி வரும் அரசியல் கட்சிகளை கைக்குள் போட்டுக் கொண்ட திமுக, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து வருவதாலும் சிறுபான்மை சமூக வாக்குகள் திமுகவுக்கு செல்கின்றன. இருப்பினும், கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் சிந்தாமல், சிதறாமல் சிறுபான்மை வாக்குகள் திமுகவுக்கு விழுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சிறுபான்மை வாக்குகளை பொறுத்தவரையில், தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு பாதகமான சூழல் தான் நிலவி வருவதாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமே பாஜக உடனான கூட்டணி தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் சிறுபான்மை சமூக வாக்குகள் அதிமுகவுக்கே கிடைத்து வந்தன. எம்.ஜி.ஆரின் பிரபலம் மூலம் சிறுபான்மை சமூகத்தினர் அதிமுக பக்கம் வந்தாலும், அதனை தக்க வைக்க ஜெயலலிதாவும் வியூகங்களை அமைத்து பணியாற்றினார்.ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜக உடனான கூட்டணியால் அதிமுக மீது நம்பிக்கையை இழந்த சிறுபான்மை சமூக மக்கள், திமுகவுக்கு வாக்களிக்க தொடங்கினர். கூட்டணியை தாண்டி பாஜக கொண்டு வந்த CAA, முத்தலாக் உள்ளிட்ட சட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆதரவு அளித்ததும் நம்பிக்கையை இழக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.இதன் பின்னணி தெரிந்து தான், சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நேர சூழலுக்காக தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுக கொள்கைகள் உயிர்ப்புடன் இருக்கும் என தெளிவுபடுத்தினார்.இருப்பினும், எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதே போல, புதிதாக களத்திற்கு வந்த தமிழக வெற்றிக் கழகமும் சிறுபான்மை வாக்குகளை குறி வைக்கிறது. அடிப்படையிலேயே விஜய்யும் சிறுபான்மை சமூகத்தினரை சேர்ந்தவர் என்ற நிலையில், கட்சி தொடங்கிய அடுத்த மாதமே பாஜக கொண்டு வந்த CAA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய், வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றார். பாஜக கொள்கை எதிரி என பட்டவர்த்தனமாக விஜய் அறிவித்தாலும், பாஜகவை விமர்சனம் செய்வதில் அவர் மென்மையான போக்கை கடைபிடித்து வருவதாக ஒரு பார்வை முன் வைக்கப்படுகிறது.சமீபத்தில் பூதாகரமாக வெடித்த திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு கூட விஜய் கருத்து சொல்லாமல் இருந்தது விமர்சனத்திற்குள்ளானது. விஜய் மீது தற்போதைக்கு சிறுபான்மை சமூக மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் ஆழமாகுமா? அது தேர்தலில் வாக்குகளாக மாறுமா? என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது.