சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் உயிரிழந்து விட்டதாக, திருத்தம் செய்யப்பட்டு வாக்காளர் பட்டியல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது ஒருபுறம் இருக்க, ராமநாதபுரத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாங்கள் தான் எஸ்ஐஆர் படிவத்தையே நிரப்பி கொடுத்தோம், அந்த படிவம்தான் பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வாக்காளர் பட்டியலில் மட்டும் உயிரிழந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது எவ்வளவு அபத்தம்? யார் செய்த சூழ்ச்சி? என்பதே இவர்களது ஆதங்கம்.சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் இந்துஜா. இவரது கணவர் ரமேஷ். இவர்கள் இருவருமே மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலும் உள்ளனர். இவர்கள் SIR விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி முகவரிடம் வழங்கி உள்ள நிலையில், திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து இருவரது பெயருமே நீக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்து விட்டதாகவும், அதனால்தான் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்த பட்டியலை பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதி, தாங்கள் நிரப்பி கொடுத்த எஸ்ஐஆர் படிவங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியர் பொற்கொடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சரிசெய்கிறேன் எனக்கூறிய ஆட்சியரிடம், தங்கள் படிவத்தை மட்டும் சரிசெய்வதற்காக அலுவலகத்திற்கு வரவில்லை, தங்களைபோன்று உயிரோடு உள்ள பலர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும், அவற்றை எல்லாம் சரிசெய்ய வேண்டும் எனவும் கூறினர்.மேலும், மாவட்ட ஆட்சியரே சரியில்லை என குற்றம்சாட்டிய அவர்கள், திட்டமிட்டு தான் இந்த சதி நடந்துள்ளது என்றும் மத்திய-மாநில அரசுகள் இரண்டுமே கூட்டுக்களவாணிகள்தான் எனவும் குற்றம்சாட்டினர்.இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, இது இறுதியான வாக்காளர் பட்டியல் அல்ல என்றும், உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.இதுஒருபுறமிருக்க ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில், உயிரிழந்த நபர்களின் விவரங்கள் மற்றும் முகவரி, எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நகராட்சி ஆணையாளர் தாமரையிடம் மனு அளித்த அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், வெளியூரில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் எஸ்ஐஆர் படிவங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் எப்படி கையெழுத்திட்டு இருப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.