Also Watch
Read this
By: Manigandan Raja
தர்ம யுத்தம் தொடங்கி OPS உடன் கரம் கோர்த்து கூடவே இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் பாண்டியனை தொடர்ந்து வைத்திலிங்கமும் திமுகவில் ஐக்கியமான நிலையில், OPS-ஐ நம்பி சென்றவர்கள் அணி மாறியிருப்பது கிட்டத்தட்ட OPS-ஐ அரசியலில் தனி மரமாக மாற்றி இருக்கிறது.
ஓபிஎஸ் உடன் இருந்தவர்கள்...
பாசம் வைக்க, நேசம் வைக்க தோழன் உண்டு, வாழ வைக்க... என OPS எடுத்த எல்லா முடிவுக்கும் கட்டுப்பட்டு கூடவே இருந்த வைத்திலிங்கம், இந்த கட்டை வண்டியுடன் காலம் தள்ள முடியாது என நினைத்து ரூட்டை அறிவாலயம் பக்கம் திருப்பியிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து 2017ல் தர்ம யுத்தம் நடத்திய OPSக்கு அப்போது இருந்த ஊடக வெளிச்சமும், பரபரப்பும் வார்த்தையால் சொல்லி விட முடியாது. ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்திருந்த OPS-ஐ 24 மணி நேரமும் ஊடகங்கள் ஒலிபரப்பு செய்தன. அதோடு, சசிகலா தலைமைக்கு எதிராக OPS உடனும் எம்.எல்.ஏ.க்கள் கை கோர்க்க, EPS தலைமையில் மீண்டும் அதிமுகவுக்குள் எண்ட்ரீ கொடுத்து சசிகலாவை வெளியேற்றினார். பின்னர் மீண்டும் EPS தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்க தொடங்கினார். இப்படி, OPS செய்த எல்லா காரியங்களுக்கும் கூடவே இருந்தது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், JCD பிரபாகர் போன்றவர்கள் தான்.
எந்த பலனும் இல்லை
EPSக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய OPSஐ தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்ட பாஜக, பின்னர் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. ஒவ்வொரு முறையும் பாஜகவின் தேசிய முகங்கள் தமிழகம் வரும் போதும் OPS-க்கு மரியாதை நிமித்தமாக சந்திக்க கூட அப்பாயிண்ட்மெண்ட் கூட கிடைக்காமல் போனது. பாஜக உதவியுடன் அதிமுக தலைமை பொறுப்பை கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்ற OPS-ன் கணக்கும் பொய்த்து போகவே, தொடர் ஏமாற்றம் காரணமாக கடைசியில் என்ன செய்வது என தெரியாமல் NDA கூட்டணியில் இருந்து வெளியேறினார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட பாஜக கூட்டணியில் இடம்பெற்ற OPS, தனக்கு மட்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஒரே ஒரு சீட்டு கேட்டு வாங்கிக் கொண்டதோடு, ஆதரவாளர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்து வந்தது. இதனாலேயே, OPS-ஐ நம்பி எந்த பலனும் இல்லை என்ற முடிவுக்கு
வந்தனர் அவரது ஆதரவாளர்கள்.
வைத்திலிங்கம் திமுகவில் ஐக்கியம்
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், OPS-ன் ROLE என்ன என்று OPS-க்கே தெரியாத நிலை தான் ஏற்பட்டுள்ளது. பாஜக மூலம் மீண்டும் அதிமுகவில் இணைந்து கொள்ள OPS அனுப்பிய சிக்னலை EPS நிராகரிக்க, தனிக்கட்சி தொடங்கி, பாஜக மூலம் NDA கூட்டணிக்கு செல்லலாம் என கணக்கு போட்டிருந்தார். ஆனால், என்ன நினைத்தாரோ தனி கட்சி தொடங்கும் முடிவில் இருந்தும் பின் வாங்கினார். இப்படி, 026 தேர்தலுக்கு என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் OPS-ஐ இனிமேலும் நம்ப முடியாது என நினைத்து வைத்திலிங்கம் திமுகவில் ஐக்கியமாகியிருக்கிறார்.
அண்ணா ஆரம்பித்த தாய் கழகத்தில்...
சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம், மகன் பிரபுவுடன் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் முன்பாக திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்தியலிங்கம், அதிமுகவில் இருந்து விலகினாலும் அண்ணா ஆரம்பித்த தாய் கழகத்தில் இணைந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், மக்களுக்காக சேவை செய்ய ஆரம்பித்த அதிமுக, தற்போது சர்வாதிகாரமாக செயல்படுகிறது எனவும் எடப்பாடி பழனிசாமி தலைமையையும் விமர்சித்தார். சில நாட்களுக்கு முன்பு தான் OPS அணியின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். அதே மாதிரி மற்றொரு ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் விஜய்யை சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். தற்போது வைத்தியலிங்கமும் திமுகவில் இணைந்த நிலையில், OPS கூடாரம் ஏறக்குறைய காலியாகிவிட்டது.
டெல்டா மாவட்டத்தில் திமுகவுக்கு பலம்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆக தேர்வு செய்யப்பட்ட வைத்திலிங்கம், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2001-2006 வரை வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். அதேபோல, 2011-2016 வரை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த வைத்திலிங்கம், ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 2021ல் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். ஓ.பன்னீர் செல்வம் அணியில் முக்கிய தளபதியாக இருந்தவர் வைத்திலிங்கம். பல இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான OPS-ன் குரலாக வைத்திலிங்கம் தான் பேசி வந்தார். வைத்திலிங்கத்தின் ஐக்கியம், டெல்டா மாவட்டத்தில் திமுகவுக்கு பூஸ்ட்டாக அமைந்திருக்கிறது. கடந்த தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 7 தொகுதிகளை கைப்பற்றிய திமுக, ஒரத்தநாடு தொகுதியில் அதிமுகவின் வைத்திலிங்கத்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஏற்கனவே, டெல்டா மாவட்டங்களில் திமுக வலுவாக இருக்கும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த வைத்திலிங்கமும் இணைந்திருப்பது பலமாக பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved