Also Watch
Read this

திமுகவினரின் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும் என கலைஞர் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஜூன்-3 கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் ஏழைகளுக்கு உதவி செய்யும் நிகழ்வு நடக்கட்டும், தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோம் என்றும் தெரிவித்து உள்ளார்.
தொண்டர்களுக்கு கடிதம்
இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியினருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;
ஒவ்வொரு நாளும் அண்ணா அறிவாலயத்திற்குத் திரண்டு வரும் உடன்பிறப்புகளின் முகம் கண்டு, உங்களில் ஒருவனான நான் ஊக்கம் பெறுகிறேன். என்னைக் கண்ட நொடியில், உடன்பிறப்புகள் தங்கள் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த கவலையிலிருந்து விடுபடுகிறார்கள். அவர்களின் உணர்வு மழையில் நான் நனைகிறேன். சமூக வலைதளங்களில் பதிவிடும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளின் உணர்வுகளையும் கவனிக்கிறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்த உணர்வே நம் வலிமை.

வெற்றியும் தோல்வியும்
வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதுமில்லை, தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை. இது நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடம். தேர்தல் களத்தில் பெறாத வெற்றியுமல்ல, அடையாத தோல்வியுமல்ல. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் கலைஞரின் பயணமும் திமுகவின் பயணமும் ஓய்வதேயில்லை.
சுவரில் அடித்த பந்து போல...
தோல்வியடைந்த தேர்தல்களுக்குப் பிறகுதான், சுவரில் அடித்த பந்து போல அதிக வேகத்துடன், திமுக திரும்பவும் களத்திற்கு வரும். துரோகங்களை எதிர்கொண்டு முறியடித்த இயக்கம். தோல்வியைப் படிக்கட்டுகளாக்கித் திரும்பத் திரும்ப வென்று காட்டும் வலிமை கொண்ட இயக்கம்.

திமுகவில் மாபெரும் மாற்றம்
தமிழ்நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் தி.மு.க.தான் இருக்கிறது. அதன் வலிமையைப் பெருக்குகின்ற வகையில், அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு, உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். அனைவரின் பங்களிப்பும் சிறந்த முறையில் வெளிப்படும் இயக்கமாக திமுக திகழும்.
கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்
ஜூன் 3ஆம் நாள் வந்தாலே ஒவ்வொரு ஆண்டும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் புத்துணர்வு ஏற்படும். சோர்வு, கவலை, விரக்தி எல்லாவற்றையும் ‘கலைஞர்’ எனும் குருதியுடன் கலந்த உணர்வு விரட்டியடித்து, களத்தில் நம்மை ஊக்கத்துடன் பணியாற்றச் செய்யும். கலைஞரின் 103ஆவது பிறந்தநாளான வரும் ஜூன் 3ஆம் நாள், நமக்கான புத்தெழுச்சி நாளாக அமையட்டும்.
சிறப்பாக கொண்டாடுவோம்
தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவோம். நலிந்தோருக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்யும் நிகழ்வு நடக்கட்டும். 75 ஆண்டுகளைக் கடந்த இயக்கமான திமுகவின் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மூத்த முன்னோடிகளுக்கு உதவிடும் வகையில் கலைஞரின் பிறந்தநாளை நிர்வாகிகள் கொண்டாட வேண்டும்.

அதிகமாக உழைத்திடுவோம்
தி.மு.க.வினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும் என ஜூன் 3 அன்று கலைஞர் மீது ஆணையிட்டு உறுதியேற்போம். தமிழ்நாட்டின் நலன் காக்க மேலும் அதிகமாக உழைத்திடுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved