Also Watch
Read this
சென்னையில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, விஜய் வெற்றி பெற்றது சுனாமி அல்ல என்றதோடு, 8 மாவட்டங்களில் தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என புள்ளி விபரங்களை அடுக்கினார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 இடங்களை வசப்படுத்திய தவெக, வெற்றிக் கணக்கை தவற விட்ட மாவட்டங்கள் என்னென்ன? அதற்கான காரணங்கள் என்னென்ன?

விஜய் முகத்திற்காக...
தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்தாலும் கூட இன்னும் தவெகவின் வெற்றி கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. சாதி, மதம் கடந்து வேட்பாளர் பெயர் கூட தெரியாமல் விஜய்யின் முகத்திற்காக ஓட்டு போட்டிருக்கிறார்கள் என ஒரு பக்கம் பெருமையாக பேசும் போது, இன்னொரு பக்கம் வேட்பாளர் பெயர்
கூட தெரியாமல் ஓட்டுப் போடுவது ஆரோக்கியமானது இல்லை என்ற விவாதமும் கிளம்பி வருகிறது.
விஜய் வெற்றி, சுனாமி அல்ல
விஜய் வெற்றிக்கு என்ன காரணம்? என அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் கூறி வரும் நிலையில், கட்சி தொடங்கி வெறும் இரண்டரை ஆண்டுகளில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களை கைப்பற்றுவது வெற்றியா? தோல்வியா? என்ற விவாதம் முடியாத தொடர் கதையாக மாறி வருகிறது. இந்த நிலையில், சென்னை அடுத்த பல்லாவரத்தில் பாமக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், விஜய்யின் வெற்றி பெரிய சுனாமியெல்லாம் இல்லை என்றதோடு, சுனாமி என்றால் 160, 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றார்.

எட்டு மாவட்டங்களில்...
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்ற புள்ளி விபரங்களை அன்புமணி பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, நீலகிரி, அரியலூர், விழுப்புரம், தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 தொகுதிகள் இருக்கும் நிலையில், ஒரு இடத்தில் கூட தவெக வெற்றி பெற முடியவில்லை.
குமரியில் மூன்றாவது இடம்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விஜய் பிரச்சாரத்திற்கு சென்ற நிலையிலும் கூட கை கொடுக்காமல் போயிருக்கிறது. விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், நாகர்கோவில், பத்மநாபபுரம் ஆகிய 5 தொகுதிகளில் 2ஆம் இடம் பிடித்த தவெக, கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள்
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் என 3 தொகுதிகளிலுமே தவெக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கூட மூன்று தொகுதிகளிலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு தொகுதிகளை பொறுத்தவரையில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தவெக. அரியலூரில் அதிமுகவும், ஜெயங்கொண்டத்தில் பாமகவும் வெற்றி பெற்றிருக்கிறது.

3 ஆயிரத்திற்கும் கீழே...
திருச்சியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கிய விஜய், 2ஆவது இடமாக நாகைக்கு தான் சென்றார். நாகையில் நின்று என்றைக்குமே நான் மீனவ நண்பன் என விஜய் பேசினார். நாகையில் விஜய்யை பார்க்க பெரும் கூட்டமும் கூடியது. இருப்பினும் கூட நாகை மாவட்டத்தில் வெற்றி கணக்கை தவற விட்டிருக்கிறது தவெக. நாகையில் 46,524 வாக்குகளுடன் 2ஆம் இடம் பிடித்த தவெக, கீழ்வேளூர் தொகுதியிலும் 53,830 வாக்குகளுடன் 2ஆம் இடத்தை தான் பிடித்துள்ளது. இரு தொகுதிகளிலுமே வெற்றிக்கான வித்தியாசம் 3 ஆயிரத்திற்கு உள்ளே தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்டா மாவட்டங்களில்...
திருவாரூர் மாவட்டத்திற்கும் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கலைஞர் பிறந்த திருவாரூர் கருவாடு போல காயுது என பிரச்சாரம் செய்தார். பச்சைத் துண்டு போட்டு விவசாயிகள் பிரச்சனையை பேசினார். ஆனாலும் அந்த மாவட்டத்தில் 4 இடங்களில் தவெகவால் வெற்றி பெற முடியவில்லை. திருத்துறைப்பூண்டியில் கம்யூனிஸ்ட்டும், நன்னிலத்தில் அதிமுகவும், மன்னார்குடியில் அமமுக சார்பில் நின்ற காமராஜும், திருவாரூரில் திமுகவும் வெற்றி பெற்றிருக்கிறது. மன்னார்குடி, நன்னிலத்தில் தவெக 3ஆம் இடத்திற்கு சென்றுள்ளது. அந்த வகையில், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் தவெக தோல்வி அடைந்திருக்கிறது. இயல்பாகவே டெல்டா மாவட்டங்களில் திமுக பலமாக இருந்து வரும் நிலையில், அங்கு தவெகவுக்கு தோல்வி முகமே கிடைத்திருக்கிறது.

விழுப்புரத்தில் தோல்வி
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், தவெக 47,512 வாக்குகள் பெற்றாலும் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டிருக்கிறது. பாஜக வேட்பாளருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 976 வாக்குகள் தான். கூடலூர், குன்னூர் ஆகிய இரு தொகுதிகளிலுமே தவெக 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. இன்னும் முக்கியமாக கட்சி தொடங்கிய விஜய் முதன்முதலில் வட மாவட்டங்களை குறி வைத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தான் கொள்கை திருவிழா மாநாட்டை நடத்தினார். ஆனாலும் கூட விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏழுதொகுதிகளிலும் தவெக தோல்வி அடைந்திருக்கிறது.

வெற்றி வாய்ப்பு...
செஞ்சி தொகுதியில் பாமக வெற்றி பெற்ற நிலையில், தவெக 3ஆம் இடமும், மயிலம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்று, தவெக 2ஆம் இடமும் பிடித்து உள்ளது. திண்டிவனம் தனி தொகுதியில் விசிக வெற்றி பெற்ற நிலையில், தவெகவுக்கு 3ஆம் இடமே கிடைத்துள்ளது. வானூர், விழுப்புரத்தில் 2ஆம் இடமும் பிடித்த தவெக, விக்கிரவாண்டி தொகுதியில் 910 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவற விட்டிருக்கிறது. அதேபோல, பொன்முடி மகன் போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதியில் திமுகவை பின்னுக்குத் தள்ளிய தவெக, 2ஆம் இடம் பிடித்து 285 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்திருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved