Also Watch
Read this
By: Manigandan Raja
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு, தமிழக அரசு தரப்பில் இன்று, பிப்ரவரி 26ஆம் தேதி, முழு மரியாதை செய்யப்படுகிறது. உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை, தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு, அரசின் முழு மரியாதைக்கு பிறகு, அவரது உடல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்படுகிறது.

பாலன் இல்லத்தில் நல்லகண்ணு உடல் அஞ்சலிக்கு வைப்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடல், மருத்துவ ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடை அளிக்கப்படுவதாக சிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
நல்லகண்ணு மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிப்பு - சிபிஐ கட்சி
சென்னையில் காலமான தோழர் நல்லகண்ணுவின் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ் கட்சி அறிவித்துள்ளது. இதன்படி, துக்கம் கடைபிடிக்கும் வகையில், செங்கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் சிபிஐ கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்
தோழர் நல்லகண்ணு மறைவிற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குரலற்றவர்களின் குரலாக வாழ்ந்து மறைந்தவர் என்றும் எளிமையான வாழ்க்கையால் அனைவராலும் போற்றப் பெற்றவர் என்றும் பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தினார். நேர்மை, எளிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நல்லகண்ணுவின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி, கமல், விஜய் இரங்கல்
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த நல்லகண்ணுவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர் நல்லகண்ணு என்று கமல்ஹாசன் எம்பியும், விவசாயிகளுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட போராளி தோழர் நல்லகண்ணு என தவெக தலைவர் விஜய்யும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved