சென்னை அருகே பல்லாவரத்தில் பங்குச்சந்தை முதலீடு குறித்து யூட்யூபில் பாடமெடுத்ததுடன் பலரிடம் பணத்தை வாங்கி கொண்டு கம்பி நீட்டிவிட்டு, மணக்கோலத்தில் இருந்த இளைஞரை, பாதிக்கப்பட்ட மக்கள் இணைந்து, மணக்கோலத்தில் இருப்பவர் என்றும் பாராமல், மண்டபத்தில் வைத்தே புரட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்தவன் கிளிண்டன். பங்குச்சந்தை முதலீடுகளில் அதீத ஆர்வம் கொண்ட இவன், தாம் மட்டும் முதலீடு செய்யாமல் தன்னை சார்ந்தவர்களையும் முதலீடு செய்ய வைத்ததுடன் யூட்யூப் சேனல்களிலும் பண முதலீடு குறித்து இண்டர்வியூ கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், தனது உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் என பலரிடமிருந்து பணத்தை வாங்கி கொண்டு பங்கு சந்தை வர்த்தகத்தில் கமிஷன் அடிப்படையில் முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.ஆரம்பத்தில் நல்ல வருவாய் வந்ததை கண்டு ஆர்ப்பரித்த முதலீட்டாளர்கள் நாளடைவில் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்து முதலீடு செய்ததாக தெரிகிறது. இதே மாதிரி கிளிண்டனுக்கு அறிமுகமானவர் தான் மோகனப்பிரியா... தனக்கும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமிருப்பதாக கூறி அவனுடன் நட்பு பாராட்டிய மோகனப்பிரியா, கிளிண்டனிடமே 75 லட்சம் வரை பணத்தை கொடுத்து முதலீடு செய்ய சொன்னதாக தெரிகிறது. கிளிண்டனும் அதனை முதலீடு செய்துவிட்ட நிலையில், எதிர்ப்பார்த்த லாபம் வராததால் கம்பி நீட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.எனக்கு எக்ஸ்ட்ரா ஒரு ரூபாய் கூட வேண்டாம்... கொடுத்த பணத்த மட்டுமாவது கொடு என மோகனப்பிரியா கெஞ்சிய போதும், கிளிண்டன் கேசுவலாக அதெல்லாம் எப்படி வரும் போனது போனது தான் என கூறிவிட்டதாக தெரிகிறது. வேணும்னா இன்னும் கொஞ்சம் பணத்த கொடு போட்டதா எடுத்துடலாம் என கிளிண்டன் கூறியதால், தன்னிடம் இருந்த ஆடி காரை விற்று 12 லட்சம், வீட்டை அடமானம் வைத்து 40 லட்சம் ரூபாயையும் தந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தையும் கிளிண்டன் ஏப்பம் விட்டதாக சொல்லப்படுகிறது.ஒரு கட்டத்தில் தாம் கிளிண்டனால் ஏமாற்றப்படுகிறோம் என்பதனை உணர்ந்த மோகனப்பிரியா, அவனை பற்றி பல்லாவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், இதே போல் புகாரளித்த மற்றொருவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கிளிண்டனை வீடியோ எடுத்து இவனிடம் யாரும் ஏமாற வேண்டாம் என கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால் எதற்கும் அசராத கிளிண்டன், அப்போதும் பணத்தை தருகிறேன் என பூசி மொழுகியிருக்கிறார்.தன் மீது ஏகப்பட்ட மோசடி புகார்கள் உள்ள போதும், எதையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத கிளிண்டன், திருமணத்திற்கு தயாராகியிருக்கிறார். இந்த விஷயம் ஏமாந்தவர்கள் மத்தியில் தீயாய் பரவிடவே, திருமணம் நடைபெறும் மண்டபத்தில் சொல்லி வைத்தார்போல் எல்லாரும் ஆஜராகியிருக்கிறார்கள். மேக்கப் கலையாமல் மணமகளுடன் கெத்தாக போஸ் கொடுத்த கிளிண்டனை பாதிக்கப்பட்டவர்கள் கொத்தாக தூக்கி சிதறுதேங்காவை போல் சிதைத்துவிட்டனர்.கூட்டமாக சேர்ந்து கும்மியடித்ததோடு, தனியாக அழைத்து சென்றும் பதம் பார்த்து அனுப்பியிருக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். அதிலும் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்து ஆக்ரோசத்துடனும் காணப்பட்டார்.கோட் சூட்டெல்லாம் கிழிந்து தொங்கும் அளவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த மக்கள், வாயில் ரத்தம் சொட்ட சொட்ட போட்டு புரட்டி எடுத்திருக்கிறார்கள். உறவினர்களின் அரவணைப்பில் தனியாக அழைத்து செல்லப்பட்டாலும், பாதிக்கப்பட்டவரில் ஒருவர் கையில் கிடைத்த சேரை கொண்டு ஓங்கி அடித்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார்.வருங்கால கணவருக்கு நிகழ்காலமே கேள்விக்குறியாகிவிடுமோ என்ற பயத்தில் மணப்பெண் திருதிருவென பரிதாபமாக முழித்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் பாவம் பார்த்து கிளிண்டனை விட்டுச் சென்ற பாதிக்கப்பட்ட மக்கள், ஒட்டுமொத்தமாக சேர்ந்து அவன் மீது பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.