அதிமுக ஊழல் சக்தி என்று, த.வெ.க. தலைவர் விஜய் பேசிய நிலையில், பதிலுக்கு கரூரில் 41 பேர் மரணத்திற்கு விஜயும் ஒரு காரணம் என அதிமுக IT WING-ல் இருந்து அறிக்கை வர, சமூக வலைதளத்தில் அதிமுக வெர்சஸ் த.வெ.க. என்ற வார்த்தை போர் உச்சமாகி வருகிறது. கட்சி தொடங்கி ஆரம்பத்தில் இருந்து அதிமுகவை தொட்டுப் பார்க்காமல் இருந்த விஜய், தற்போது செயல் வீரர்கள் கூட்டத்தில் விமர்சித்ததன் பின்னணி என்ன? பதிலுக்கு அதிமுகவும் விஜயை தீவிரமாக எதிர்க்க தொடங்கியது ஏன்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்...தவெகவை தொடங்கிய விஜய், திமுகவை தனது அரசியல் எதிரி என அறிவித்தார். அப்போதில் இருந்து எந்த மீட்டிங்கில் பேசினாலும் விஜயின் முழு விமர்சனமும் திமுகவை நோக்கி தான் இருக்கும். பாரபத்தி மாநாட்டில் எம்.ஜி.ஆர்., அண்ணாவை கையிலெடுத்த விஜய், நாமக்கல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசும் போது முதன்முறையாக அதிமுகவை விமர்சித்தார். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி, ஜெயலலிதா வழி நடத்திய கட்சி தற்போது எந்த நிலைமையில் இருக்கிறது என விஜய் பேசினார்.ஊழல் சக்தி என விமர்சனம்இந்த நிலையில், மாமல்லபுரத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுகவை ஊழல் சக்தி என விமர்சனம் செய்திருந்தார். வழக்கத்திற்கு மாறாக விஜய்யின் பேச்சில் அதிமுக மீதான விமர்சன நெடி தான் அதிகமாக இருந்தது. பனையூர் பண்ணையார்இதற்குப் பதிலளித்த அதிமுக, விஜயை பனையூர் பண்ணையார் எனக் குறிப்பிட்டு காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளது. சட்டவிரோதமாக பிளாக்கில் டிக்கெட் விற்று, பல கோடி பணம் பெற்ற விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்ற அதிமுக, தனது திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக 5 மணி நேரம் கை கட்டி காத்திருந்தது மறந்து விட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளது. விஜய்யும் ஒரு காரணம்கரூரில் 41 பேரின் மரணத்திற்கு விஜய்யும் ஒரு காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ள அதிமுக, என்ன வழக்கு வரப் போகிறதோ? என 72 நாட்களுக்கும் மேலாக பனையூரில் பதுங்கி இருந்த விஜய், எவ்வளவு பெரிய வீரர் என எல்லாருக்கும் தெரியும் எனவும் கூறியுள்ளது. கரூர் சென்று கண்ணீரை துடைக்காமல் கிளிசரின் கண்ணீரோடு அஞ்சலி செலுத்தி விட்டு தன்னையே PROMOTION செய்து கொண்டது, ஆபத்தான அரசியலின் அடையாளம் என விஜய்யை விளாசியிருக்கிறது அதிமுக.அதிமுக - தவெக இடையே வார்த்தைப் போர்அதிமுகவின் அறிக்கைக்கு காட்டமாக பதிலடி கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள் த.வெ.க.வின் விர்ச்சுவல் வாரியர்ஸ்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், கூவத்தூர் ரிசார்ட் சம்பவம் என அதிமுகவின் கடந்த கால வரலாறுகளை தோண்டி எடுத்து பதிலடி கொடுத்து வர, இணையத்தில் அதிமுக - தவெக இடையேயான வார்த்தைப் போர் உச்சமாகியிருக்கிறது. அதோடு, படத்திற்காக விஜய் கை கட்டி நின்றதாக அதிமுக கூற, கூட்டணிக்காக இபிஎஸ் பிரச்சாரத்தில் தவெக கொடியை பறக்க விட்டு வலிய காத்திருந்ததாக, த.வெ.க.வினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதிமுக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்41 பேர் உயிரிழந்த கரூர் பெருந்துயர சம்பவத்தில் விஜய்க்கு வலிய வந்து ஆதரவு கொடுத்த அதிமுக, ஆளுங்கட்சியான திமுக மீது தான் தவறு என குற்றம் சாட்டியது. விஜய்யை கூட்டணிக்கு கொண்டு வரும் நோக்கில் செல்லும் இடமெல்லாம் பிரச்சாரத்தில் கரூர் சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என முழங்கினார் எடப்பாடி பழனிசாமி. அதோடு, அதிமுக கூட்டங்களில் த.வெ.க. கொடிகளை பறக்க விட்டு, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது என பேரானந்தம் அடைந்தார். அதேபோல, முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் அதிமுக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என வெளிப்படையாக அழைப்பு விடுத்தனர்.விஜய் வர தயாராக இல்லைஆனால், அதிமுக தலைமையிலான கூட்டணியை ஏற்று, விஜய் வர தயாராக இல்லை என்ற நிலையில், பாஜக உடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்தது. பாஜகவை கொள்கை எதிரி என விஜய் அறிவித்திருந்ததால், அதிமுக கூட்டணியில் அவர் ஐக்கியமாவது சாத்தியமில்லாமல் போனது. இத்தனை நாட்களாக விஜய் என்ன பேசினாலும், எம்.ஜி.ஆர்.ஐ கையிலெடுத்தாலும் அதிமுக அமைதியாக தான் இருந்தது. அவ்வளவு ஏன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த போது கூட செங்கோட்டையனை தான் விமர்சித்தார்களே தவிர, விஜயை விமர்சிக்கவில்லை. தவெக VS திமுக, அதிமுகவிஜய் உடன் எப்படியாவது கூட்டணி அமைத்து விட வேண்டும் என பிரயாசப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆசைக்கு கடைசியாக முற்றுப்புள்ளி தான் வைக்கப்பட்டது. விஜய்யுடன் கூட்டணி அமைக்க இனிமேல் வாய்ப்பு இல்லை என உறுதியானதை அடுத்து தான், தற்போது அதிமுக விமர்சனங்களை முன் வைக்க தொடங்கியிருக்கிறது. தனித்து போட்டி என்பதை உறுதி செய்த விஜய், திமுக-அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளையும் விமர்சித்தால் தான், அரசியலுக்கு புதிதாக வந்திருக்கும் தமக்கு கை கொடுக்கும் என்பதை உணர்ந்து தான் செயல் வீரர்கள் கூட்டத்தில் அவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. இதுவரைக்கும் திமுகவுக்கு மட்டும் விமர்சன கண்டெண்ட் போட்டு வந்த த.வெ.க.வினருக்கு தற்போது ஓவர் டுயூட்டியாக அதிமுகவினருக்கும் சேர்த்து விமர்சன கண்டெண்ட் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. Related Link ஓயாத திமுக - காங். மோதல், முடிவு எப்போது?