பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சியான காங்கிரஸ், ஆட்சியில் பங்கு கேட்கிறது என்று, திமுக எம்.எல்.ஏ. தளபதி பேசியது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எச்சரிக்க, திமுக கூட்டணியில் மீண்டும் புகைச்சல் ஆரம்பித்துள்ளது.சீட்டு கொடுக்கக் கூடாதுமதுரையில், மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. தளபதி, காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணியை குறிப்பிட்டு, பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி தான் காங்கிரஸ் எனவும், இவர்களெல்லாம் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள் எனவும் கூறினார். அதோடு, திமுக இல்லை என்றால் இந்தியா கூட்டணியே இல்லை என்ற தளபதி, அடுத்த முறை தேர்தல் வரும் போது, ஆட்சியில் பங்கு கேட்பவர்களுக்கு சீட்டு கொடுக்கக் கூடாது என அதிகார தொனியில் பேசியிருந்தார்.அமைதியாக இருக்கும் காலம் முடிந்து விட்டதுதிமுக எம்.எல்.ஏ. தளபதியின் பேச்சு, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும், அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலமும் முடிந்து விட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாதுஅதேபோல, கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, காங்கிரஸ் கட்சியில் யார் வேட்பாளர்களாக போட்டியிட வேண்டும் என்பதை ராகுல்காந்தி முடிவு செய்வார் எனவும், காங்கிரஸ் கட்சியை பொது வெளியில் தொடர்ந்து அவமதிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எனவும் சீறியிருக்கிறார். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் இருந்தும் கூட்டணி தர்மம் கருதி தான் அனுசரித்து செல்கிறோம் எனவும், கண்ணியத்தை கடைபிடிப்பது தான் அனைவருக்கும் நல்லது எனவும் எச்சரித்திருக்கிறார். யாகாவாராயினும் நாகாக்க...அதேபோல, காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலும் யாகாவாராயினும் நாகாக்க என்ற வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப கூட்டணியின் ஒருமைப்பாட்டை காக்க வேண்டியது எல்லாருடைய கடமை என்பதை எம்.எல்.ஏ. கோ.தளபதி புரிந்து கொள்வார் என நினைக்கிறேன் எனவும், அந்த விமர்சனத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துவதாகவும் கூறினார். சுமூகமாக உறவு இல்லை கடந்த சில நாட்களாகவே திமுக - காங்கிரஸ் இடையே சுமூகமாக உறவு இல்லை என்பது பொது வெளியிலேயே தெரிகிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் பேச தொடங்கியது திமுகவினருக்கு ஒவ்வாமையாக இருக்க, இரு கட்சிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் கட்சிக்கு என குறிப்பிட்ட வாக்கு வங்கி இருப்பதை சுட்டிக்காட்டி தான் காங்கிரஸினர்ஆட்சியில் பங்கு என்பதை முன் வைத்து வருகிறார்கள் என்ற நிலையிலும், காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை முன் வைத்தே திமுகவினர் கேலி கிண்டல் செய்வது தொடர்கதையாகி வருகிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு2004ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பயணித்து வருகிறது. இடையில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் தான் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. வருகிற 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் பயணிக்கிறது என்பது கிட்டத்தட்ட உறுதி ஆனாலும், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தில் முரண்பாடு நீடித்து வருகிறது. ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் கட்சியினரை திமுகவின் சமூக வலைதள வாசிகள் டீல் செய்யும் விதமும் இரு கட்சிகள் இடையே மோதல் தீயை தூண்டி விட்டுஎரிய வைக்கிறது. முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லைசமீபத்தில், டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட, கூட்டணி விவகாரம் குறித்து யாரும் பொது வெளியிலோ, சமூக வலை தளத்திலோ பேச வேண்டாம் என தமிழக காங்கிரசாருக்கு அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. ஆனாலும் கூட திமுக - காங்கிரஸ் இடையேயான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இதே நிலைமை நீடித்தால் எப்படி இரு கட்சிகளும் தேர்தல் களத்தில் இணைந்து பணியாற்றும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவருக்கு ஒருவர் மனக் கசப்பை வைத்துக் கொண்டு எப்படி தேர்தல் களத்தில் இணைந்து நிற்க முடியும்? என கேள்வி எழுந்துள்ள நிலையில், மனக் கசப்பை இரு கட்சிகளின் மேலிடமும் சரி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் சுப்புராமன். Related Link ரவுடி தலையில் இறங்கிய புல்லட்