Also Watch
Read this
சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், வாக்குப்பதிவை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்ட நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. புதிதாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு போட்டியாக, 75 வருட பழமையான கட்சியான திமுகவினரும் ரீல்ஸ் கோதாவில் குதிக்கவே, சட்ட சிக்கலில் சிக்கும் சூழல் வந்துள்ளது.

ஆட்டிப்படைக்கும் ரீல்ஸ் மோகம், கைது
ரீல்ஸ் மோகம் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கும் என எவ்வளவோ உதாரணம் இருந்தாலும், தேர்தலிலும் கூட அது எதிரொலித்திருக்கிறது என்பது தான் வேதனை. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாகவே இருக்கும் நிலையில்,
திருப்பத்தூரில் த.வெ.க.வின் விசில் சின்னத்திற்கு வாக்கு செலுத்துவதை வீடியோ எடுத்து பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் தொகுதியில் திருப்பதி என்பவர் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாக வாக்கு செலுத்தி வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்த சக்தி பிரபா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணை வளையத்தில்...
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டுப் போட்டு சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டது வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுப் போட்டு பதிவிட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது. வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு செலுத்தி வாட்ஸ் அப் மூலம் பரவ விட்ட நிலையில், அந்த நபர் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதே தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சோனியாவுக்கு ஆதரவாக விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்தியதை வீடியோ எடுத்து மணிமாறன் என்ற நபர் வீடியோ பதிவிட்ட நிலையில், அந்த நபர் குறித்து விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.

குவியும் வழக்குகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் தடையை மீறி வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போனை எடுத்துச் சென்ற த.வெ.க. தொண்டர், விசில் சின்னத்திற்கு வாக்கு அளிப்பதை வீடியோ எடுத்து தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டிருந்தது சர்ச்சையாகியுள்ளது.

இதேபோல் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட முக்கூடல் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் அப்பகுதியில் உள்ள ஆர்ச் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், உதய சூரியன் சின்னத்திற்கு தனது வாக்கை பதிவு செய்து அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தநிலையில் அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சர்ச்சை, விமர்சனம்
வாக்குச் சாவடி மையத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்ல கூடாது என விதி இருக்கும் போது, கட்சி பாகுபாடு இல்லாமல் புதிதாக வந்த கட்சி மட்டுமல்லாமல், பாரம்பரிய வரலாறு கொண்ட திமுகவினர் கூட வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர். வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்வதை கவனிக்காமல் கூட வாக்குச்சாவடி மையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் இருந்ததும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved