தமிழகத்தில், கடந்த சில தினங்களாக கன மழை வெளுத்து வாங்கிய நிலையில், மழைக்கு காரணமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.மீண்டும் வெளுத்து வாங்கிய கனமழை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மீண்டும் கனமழை வெளுத்து வாங்கியது. சென்ட்ரல், அண்ணா சாலை, எழும்பூர், புதுப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. கொட்டும் மழையிலும் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை;வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2ஆவது நாளாக ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர்.