காசாவில், இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 48 பிணை கைதிகளின் ‘பிரியாவிடை’ புகைப்படத்தை ஹமாஸ் வெளியிட்டு, பரபரப்பை பற்ற வைத்துள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை, அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்து விட்டது.கடந்த வாரம், காசாவில், அதிகாலை நேரத்தில் இஸ்ரேல் தொடர்ச்சியாக, 4 முறை குண்டு வீசியதால், வானில் தீப்பிழம்பு ஏற்பட்ட காட்சிகளின் வீடியோ வைரலாகியது. போர் நிற்காதா? அல் - அக்சா மசூதி (Al-Aqsa Mosque), இது தான் போருக்கு மையப்புள்ளி. இஸ்ரேஸ், பாலஸ்தீனம் இடையே சின்ன பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் பெரிதாக பேசப்படுவது இந்த மசூதி. இந்த புனித தலத்தின் உரிமை யாருக்கு? காலம் காலமாக அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் வரலாறு தான் என்ன?மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேமை 1948ஆம் ஆண்டில் இருந்து 1967ஆம் ஆண்டு நடந்த 6 நாள் போர் வரை, ஜோர்டான் (Jordan) ஆட்சி செய்து கொண்டு இருந்தது. ஆறே ஆறு நாள் போருக்குப் பிறகு, இங்கு கால் பதித்து, இஸ்ரேல் தனதாக்கி கொண்டது. இந்நிலையில் தான், ஜோர்டான் - இஸ்ரேல் இடையே சமாதான பேச்சின்படி, கிறிஸ்தவர், முஸ்லிம் மத தலங்களைக் கண்காணிக்க ஜோர்டானுக்கு உரிமை தரப்பட்டது. ஆனால், இஸ்ரேலின் பிரதமராக இருந்த நஃப்தாலி பென்னட் (Naftali Bennett) வெளியிட்ட அறிவிப்பு, பாலஸ்தீனர்களை கொதிப்படைய வைத்தது. அல்-அக்ஸா மசூதியின் நிர்வாகத்தில் வெளிநாட்டு தலையீட்டை நிராகரிப்பதாக, அறிவித்தார். 'பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமிக்கும்' திட்டத்தின் ஒரு பகுதி என்று ஜோர்டான் கொந்தளித்தது. அல்-அக்ஸா மசூதிக்கு இவ்வளவு முக்கியம் ஏன்?இது, யூதர்களின் புனித இடம், இஸ்லாத்தின் மூன்றாவது புனித இடம். யூதர்களால் 'டெம்பிள் மவுண்ட்' என்றும், முஸ்லிம்களால் 'அல்-ஹராம் அல்-ஷரீஃப்' என்றும் அழைக்கப்படும் புனித தலத்தில் 'அல்-அக்ஸா மசூதி' மற்றும் 'டோம் ஆஃப் தி ராக்' இருக்கின்றன. 'டோம் ஆஃப் தி ராக்' என்றால், யூத மதத்தில், அனைத்தையும்விட புனிதமான தலம் என்கின்றனர். முகமது நபியுடன் இணைந்திருப்பதால், இதை ஒரு புனித இடமாக முஸ்லிம்களும் பார்க்கின்றனர். ஜோர்டானின் வக்ஃப் வாரியம் இதனை நிர்வகித்தாலும், பாதுகாப்பு ஏற்பாடு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆக, இன்றல்ல, நேற்றல்ல நூறாண்டுகளாக நடக்கிறது மோதல். முதல் உலகப் போரில், மத்திய கிழக்கில் பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட பகுதி, பிரிட்டனின் கட்டுப்பாட்டில் வந்தது. சிறுபான்மை யூதர்களும் பெரும்பான்மை அரேபியர்களும் இந்த நிலத்தில் இருந்தவர்கள். யூத மக்களுக்கு பாலஸ்தீனத்தை தருமாறு, சர்வதேச சமூகம், பிரிட்டனிடம் கேட்ட போது, பதற்றம் தொடங்கியது. யூதர்களுக்கு, இது அவர்களது மூதாதையர் வாழ்ந்த பகுதி. பாலஸ்தீன அரேபியர்கள், இந்தப் பகுதி தங்களுடையது என்கின்றனர். கடந்த 1947ஆம் ஆண்டு, ஐநா சபை பாலஸ்தீனத்தை யூதர்கள் மற்றும் அரேபியர்களின் தனி நாடுகளாகப் பிரிக்க வாக்களித்தது. ஆனால், பிரச்னையை தீர்க்க முடியவில்லை. 1948ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்கினர். இதற்கு பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போர் தொடங்கியது. லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேறினர். இதை அவர்கள் 'பேரழிவு' என்றனர். இடையில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நேரத்தில், பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு சேர்த்தது. தற்போது, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் இன்றும் நின்றபாடில்லை. உலக நாடுகளின் கூக்குரலுக்கு யாரும் செவி சாய்ப்பதாக இல்லை. ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. தற்போது, தரை வழி, வான்வழித் தாக்குதல் தீவிரமாகி உள்ளது. 24 மணி நேரத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்தது. மன அமைதிக்காக வழிபடும் இடத்திற்காக, இரு தரப்பும் மோதிக்கொள்வது உள்ளூரில் தொடங்கி உலக நாடுகளை வேதனையடைய வைத்துள்ளது.எங்களையும் வாழ விடுங்கள் என்கிறது அங்குள்ள பிஞ்சுக் குழந்தைகளின் கூக்குரல்...