சென்னை தியாகராய நகரில் புதுக்கோட்டை அய்யா செட்டிநாடு ஓட்டல் ஊழியரை அதன் உரிமையாளர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஓட்டலில் சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு பொரியல் வைப்பதில் சர்வர் தாமதம் செய்வதாக புகாரளித்ததால், உரிமையாளர் ஆத்திரமடைந்து அந்த சர்வரை கடுமையாக தாக்கியுள்ளார்.ஓட்டலில் சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு பொரியல் வைப்பதில் தாமதப்படுத்தியதால், உரிமையாளரின் அடி தாங்க முடியாமல் வாய்விட்டு அழுத அப்பாவி ஊழியரின் பரிதாப காட்சிதான் இவை. சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள புதுக்கோட்டை அய்யா செட்டிநாடு மெஸ்ஸில் ஊழியருக்கு எதிரான கொடுமை நடந்தேறியது. அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் பெயர் பெற்ற இந்த மெஸ்ஸில் மதிய நேர உணவு வேளையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இந்த நிலையில், அந்த மெஸ்ஸில் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்கள், சர்வரிடம் பொரியல் கேட்டதாகவும், ஆனால் பொரியல் வைக்க தாமதப்படுத்தியதால், ஓட்டல் உரிமையாளரிடம் வாடிக்கையாளர்கள் முறையிட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஓட்டல் உரிமையாளர், வாடிக்கையாளர்கள் கண் முன்னே சர்வரை கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும், தனி அறைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கப்பட்டதால், அந்த சர்வர் அடி தாங்க முடியாமல் வாய்விட்டு கதறி அழுதார்.இந்த சம்பவத்தை, அந்த மெஸ்ஸுக்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் சிலர் தட்டிக் கேட்டு உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.நிலமையை புரிந்து கொண்ட புதுக்கோட்டை அய்யா செட்டிநாடு மெஸ் உரிமையாளர் அங்கிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், அடிவாங்கிய அந்த சர்வர் தனது தங்கச்சி மகன் என்று சொல்லி பூசி மெழுகினார்.லட்சியக் கனவுகளுடன் சென்னைக்கு வேலை தேடி வரும் பலருக்கு சாப்பாடு மிகப்பெரிய பிரச்னை என்பதால், முதலில் அவர்கள் தேர்வு செய்யும் தொழில் நிறுவனம் உணவகம்தான். அப்படி வரும், அப்பாவி இளைஞர்களை கடுமையாக வேலை வாங்கும் ஓட்டல் உரிமையாளர்கள், இதுபோன்ற தாக்குதல்களிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஆகவே, ஊழியரை ஈவு இரக்கமின்றி தாக்கிய, புதுக்கோட்டை அய்யா செட்டிநாடு மெஸ் நிர்வாகத்தின் மீது தொழிலாளர் நலத்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு எதிரான இதுபோன்ற அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.