அதி விரைவில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட போகும் அதிகார மமதை கொண்ட திமுக, தனக்கு பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தை தொடங்கி இருப்பதாக கூறியிருக்கும் விஜய், அறிவு திருவிழா என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக திட்டும் அவதூறு திருவிழாவை நடத்தி இருப்பதாக விமர்சித்துள்ளார். திமுகவை விமர்சித்து முழு நீள அறிக்கையை வெளியிட்டு இருக்கும் விஜய், ஒரு இடத்தில் கூட திமுக என்றோ, முதலமைச்சர் பெயரையோ குறிப்பிடாமல் மறைமுகமாகவே விமர்சித்து தள்ளி இருக்கிறார்.கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, த.வெ.க.வின் செயல்பாடுகள் வேகமெடுத்த நிலையில், திமுகவை விமர்சித்து முழு நீள அறிக்கையை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார் விஜய். சமீப காலமாக, ஆட்சி, அதிகாரத்தில் இருந்து அதி விரைவில் தூக்கி எறியப்பட போகும், அதிகார மமதை கொண்ட கட்சி, அவசர கதியில் தனக்கு பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தை தொடங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ள விஜய், இப்போதெல்லாம் அந்த கட்சியின் ஒரே இலக்கு தமிழக வெற்றிக் கழகத்தை தூற்றுவது மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.1969ஆம் ஆண்டுக்கு பிறகு, அவதூறு தான் அரசியல் கொள்கை, லஞ்ச, லாவண்யம், ஊழல் தான் லட்சிய கோட்பாடு என்ற எண்ணத்துடன் இருந்து வரும் அந்த கட்சிக்கு, மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வரும் தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து மூளை மழுங்கி முனகத்தானே செய்யும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.நாகரீகமாக நாம் விமர்சித்ததற்கே அஞ்சி நடுங்கி தங்கள் ஐம்பெருங்குழுக்களை இறக்கி விட்டும் அதிரி, புதிரியாக ஆலோசித்தும் த.வெ.க. மீது அவதூறு பரப்பி வருவதாக கூறியுள்ள விஜய், அந்தஅவதூறை மக்கள் ஏற்றுக் கொள்ளாத இயலாமையில், ‘எந்த கொம்பனாலும் எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்று, அதிகார மயக்க முழக்கம் எழுப்ப தொடங்கியிருக்கிறார் அந்த கட்சியின் தலைவர் எனவும் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.தங்களை கொள்கைவாதிகளாக காட்டிக் கொள்ள, மக்களை ஏமாற்ற தமிழ் மொழி, தமிழினம் தான் தங்கள் உயிர் என்றும், மொழி, மானம் தான் தங்கள் கொள்கை என்றும் சம்பிரதாய முழக்கத்தை அந்த கட்சியின் தலைவர் எழுப்ப தொடங்கியிருக்கிறார் என்ற விஜய், போதாக்குறைக்கு அறிவு திருவிழா என்ற பெயரில், பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளை தூசு தட்டி, தோரணம் கட்டப் பார்க்கும் கொள்கை உறுதி பற்றியெல்லாம் தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.யாரை ஏளனமாக பரிகாசம் செய்தார்களோ... அவர்களிடமே பதவிக்காகபம்மி நின்ற போனது எங்கே சென்றது மானம்? ஆட்சியில் இல்லாத போது தமிழ், தமிழர் என கூறி விட்டு ஆட்சிக்கு வந்ததும் அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது, பழி போட்டு விட்டு பதவி சுகம் காணும் போது எங்கே போனது மானம்? சாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்து தப்பித்துக் கொள்ளும் போது எங்கே போனது சமூக நீதி? எனவும் அடுக்கடுக்காக விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.அறிவு திருவிழா என பெயர் வைத்து, முழுக்க முழுக்க தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக திட்டும் அவதூறு திருவிழாவாக மாற்றி வைத்திருப்பதாக காட்டமான விஜய், மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் நம்மை பார்த்து கொள்கையற்றவர்கள் என கூறுவதற்கு முக்கிய காரணமே, தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து ஏற்பட்ட மன உளைச்சல் தான் எனவும் விஜய் சாடியுள்ளார்.அதோடு, 53 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி, அதிகாரத்தை பகல் கனவாக்கப் போகும் ’பக்கா மாஸ்’ கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து நாள்தோறும் நாக்குழறி, உளறுவதாக கூறியதுடன்... பவள விழா பாப்பா நீ...பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா...நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா என கிண்டலடித்து பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ள விஜய், 2026 தேர்தலில் மக்களுடன் மக்களாக நின்று இந்த அவதூறு மன்னர்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.அறிக்கை முழுக்க, திமுக மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்திருக்கும் விஜய், ஒரு இடத்தில் கூட திமுக என்றோ, மு.க.ஸ்டாலின் என்றோ பெயரை குறிப்பிடாமல் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.திமுகவின் மேல்மட்ட தலைவர்கள் பேசும் போது, விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் தான் பேசி வருகிறார்கள் என்ற நிலையில், விஜய்யும் அதே பாணியில் மறைமுக விமர்சனத்தை முன் வைத்து அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.இதையும் பாருங்கள் - TVK Arunraj | கரூர் சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் சிக்குவார்கள், TVK அருண்ராஜ் பேட்டி