கொல்கத்தா கிழக்கு பெருநகர பைபாஸில் உள்ள அபிஷிக்தா கிராசிங்கிற்கு அருகே, அதிகாலை 4 மணியளவில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற கார் ஒன்று அங்குள்ள தூணில் பயங்கரமாக மோதியது. காரில் ஒரு சிறுவனும், இரண்டு ஆண்களும் உயிருக்கு போராடிய நிலையில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவமனையில் ஒருவருக்கு மயக்கம் தெளிந்ததும் அவர் சொன்ன தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. விபத்தில் சிக்கியது பிரசுன் டே, அவரது சகோதரர் பிரணாய் டே, பிரணாயின் 14வயது மகன் என்பதும், 3பேறும் திட்டமிட்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. விபத்தை தற்கொலை வழக்காக விசாரித்த போலீசாருக்கு பிரணாய் மேலும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது தங்கராவில் உள்ள நான்கு அடுக்கு மாடியில் தனது மனைவி உட்பட 3பேர் இறந்து கிடப்பதாக பிரணாய் கூறினார். இதை கேட்டதும் திடுக்கிட்ட போலீசார் தங்கரா வீட்டிற்கு சென்றனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் இரு பெண்கள் கை மணிக்கட்டுகள் அறுக்கப்பட்டு, கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். மற்றோரு அறையில் 14வயது சிறுமியும் இறந்து கிடந்துள்ளார். 3பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதற்குள் பிரணாயிடம் விசாரித்ததில், தானும், தனது குடும்பமும் ஒன்றாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். தங்கராவில் உள்ள வீட்டில் பாரன்சிக் நிபுணர்களும், குற்றப்பிரிவு போலீசாரும் சோதனையிட்டனர். அதில் வீட்டில் ஒரே ஒரு கத்தி மட்டும் கிடைத்துள்ளது. இறந்தவர்கள் பெங்காலியின் பாரம்பரிய உணவை செய்து அதில் மயக்க மருந்து கலந்து சாப்பிட்டுள்ளனர். அங்கிருந்த சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த அன்று மாலை 5 மணியளவில் இருந்து வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. நள்ளிரவு 12 மணிக்கு பிரணாய், அவரது சகோதரர் மற்றும் சிறுவனும் வெளியே வந்து காரில் ஏறி சென்றது பதிவாகி இருந்தது . இதற்கிடையே இறந்த பெண்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், இரு பெண்களின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், கழுத்து மணிக்கட்டு பகுதி வெட்டப்பட்டு அதிக ரத்தம் வெளியேறி இறந்ததாகவும், சிறுமிக்கு விஷம் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சிறுமி உட்பட இரு பெண்களும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், பிரணாயிடம் மீண்டும் விசாரித்தனர். அதில், பிரனாயும், அவரது சகோதரரும் தோல் பதனிடும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். கொரோனா பரவரலால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடன்கள் அதிகமாக பணம் கொடுத்தவர்கள் பிரணாய் மற்றும் அவரது சகோதரருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த சகோதரர்கள் தங்களின் மனைவிகளுக்கும் 14வயது சிறுமி, சிறுவனுக்கு உணவில் மயக்கமருந்து கொடுத்துள்ளனர். சிறுமியும், இரு பெண்களும் இறந்ததும், சிறுவனுடன் காரில் ஏறிய சகோதரர்கள் வேகமாக சென்று காரை விபத்துக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதை எல்லாம் விசாரணையில் தெரிந்து கொண்ட போலீசார், இறந்த 3பெண்களும் தற்கொலை தான் செய்து கொண்டனரா அல்லது பிரணாய் மற்றும் அவரது சகோதரரால் கொலை செய்யப்பட்டனரா என்பது தெரியாமல் திணறினர். தற்கொலை, கொலை என திணறடித்த குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.