சென்னை, கோயம்பேட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்தில் அடைத்து வைக்கப்பட்டு, இரவு முழுக்க அலைக்கழிக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது, தாக்குதலில் காயமடைந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சி ராணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறும் போராட்டக்காரர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அரசிடம் கையேந்த வேண்டுமா? என ஆவேசமாக பேசி உள்ளனர்.தொடர் போராட்டம் அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் வழங்கப்படுவதுபோன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மாற்றுத்திறனாளிகள் கைதுஅந்தவகையில், சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு RR ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பின்னர், திருமங்கலத்தில் உள்ள மண்டபத்திற்கு அழைத்து செல்வதாககூறி 18 பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், அவர்களை மண்டபத்திற்கு அழைத்து செல்லாமல் நள்ளிரவு 12 மணிவரை பேருந்தைவிட்டு இறக்காமல் சுற்றி வந்துள்ளனர். அரும்பாக்கம், கிளாம்பாக்கம், கிண்டி, மதுரவாயல் என சென்னை சிட்டியை சுற்றியடித்து 2 மணிக்குமேல் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளது.மருத்துவமனையில் அனுமதிஇதையடுத்து, மாற்றுத்திறனாளிகளை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டுநர்களும், காவல்துறையினரும் சென்றதாக தெரிகிறது. இதனால், பேருந்துக்குள்ளேயே சிலர் படுத்து உறங்க, பேருந்து நிலையத்தில் போர்வைகளை விரித்து ஆங்காங்கே சிலர் தூங்கினர். இதில், சில மாற்றுத்திறனாளிகள் தங்களது 4 சக்கர வாகனத்திலேயே சாய்ந்து தூங்கிய அவலத்தையும் காண முடிந்தது. இப்படியாக, கண்ணுறக்கம் கெட்டு சிலமணி நேரத்தில் இரவும் பகலாக கோயம்பேட்டில் 3 இடங்களில் மீண்டும் மாற்றுத்திறனாளிகள் உச்சிவெயிலில் சாலையின் குறுக்கே அமர்ந்தும், கைக்குழந்தைகளை வைத்தபடியும், சாலையில் படுத்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது பேசிய அவர்கள், தங்களை நேக்காக பேருந்தில் ஏற்றிய காவல்துறையினர் இறக்கி விடுமாறு கெஞ்சியும் உள்ளுக்குள் வைத்தே தாக்கியதாகவும், அந்த தாக்குதலில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சி ராணி மீது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொந்தளித்தனர்.உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்உணவு, தண்ணீர் என எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் தங்களை அலைக்கழித்ததாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், ஆயிரத்து 500 ரூபாயை வைத்து எப்படி வாழ்வது? உதவித்தொகையை உயர்த்துமாறு அரசிடம் கையேந்திக் கொண்டே இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.தனது தந்தையான மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஊனமுற்றோர் என்பதை மாற்றுத்திறனாளிகள் என மாற்றியதாகவும், தானும் தனது தந்தையை போன்றே மாற்றுத்திறனாளிகளை மதிப்பதாகவும், அதனால்தான் மாற்றுத்திறனாளிகள் துறையையே தன்வசம் வைத்துள்ளதாகவும் சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்களுக்கு நல்லது செய்யாமல் வெறும் துறையை மட்டும் வைத்துக்கொள்வதில் என்ன பிரயோஜனம்? மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரும் துறையும் தங்களுக்கு சோறு போடுமா? என கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளிகள் ஒன்று தங்களுக்கு வேலை வழங்க வேண்டும், இல்லை சுயதொழில் தொடங்க லோன் வழங்க வேண்டும், அப்படியும் இல்லை என்றால், உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.பதில் சொல்லியே ஆக வேண்டும் இதனிடையே, அவர்களை பேசவிடாமல் ஒரு காவலர் தடுக்க முயன்றார். ஆனாலும், அதையும்மீறி தொடர்ந்து தங்கள் மனக்குமுறல்களை கொட்டிய போராட்டக்காரர்கள், தங்களின் வாழ்வாதாரத்தில் அரசுக்கு அக்கறை இல்லை, ஆனால் தங்களின் வாக்குகள் மட்டும் வேண்டுமா? என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினர். மேலும், பெண்கள் மீது ஆண் காவலர் மீது எப்படி கை வைக்கலாம்? அதற்கு யாராக இருந்தாலும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என ஆவேசமாக பேசினர். மக்கள் தேர்ந்தெடுத்ததால்தானே முதலமைச்சர், தற்போது அந்த மக்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் ஏன் அந்த முதலமைச்சர் என கொந்தளித்தனர். இப்படி, மாற்றுத்திறனாளிகள் தங்கள் குமுறலை கொட்டிக்கொண்டிருக்க, வலுக்கட்டாயமாக அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர் காவல்துறையினர்.அலைக்கழிக்க கூறிய அதிகாரி யார்?இதனிடையே, பேருந்துக்குள் இருந்தபோது ஆவேசமாக பேசிய ஜெயந்தி என்ற பெண்ணின் வீடியோவும் வைரலாகி வருகிறது. காவல்துறை தங்களை கேவலமாக நடத்துவதாகவும், தீவிரவாதிகளை பிடித்து வைத்ததுபோல இரவு முழுக்க பேருந்துக்குள் வைத்து அலைக்கழித்ததாகவும் கூறிய மாற்றுத்திறனாளி ஜெயந்தி, தங்களை அலைக்கழிக்க கூறிய அதிகாரி யார்? அந்த அதிகாரி மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா? ஒருவேளை அந்த அதிகாரிக்கு மனவளர்ச்சி குன்றி இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வரும் பல்வேறு அரசியல் கட்சியினர், திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளதாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தவகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். Related Link கோயில் தேரோட்டத்தில் உயிரிழந்த தொழிலாளி