சிங்கம்புணரி அருகே இயங்கி வரும் கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டி, 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மாம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தும்பைபட்டியில் 20க்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள், இப்பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி, 2ஆவது முறையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் ஆறுக்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், மற்றொரு கல்குவாரிக்கு அனுமதி அளித்துள்ளதாக, கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். சிங்கம்புணரி வட்டாட்சியர் நாகநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, கல்குவாரிக்கான அனுமதி உரிமத்தை ரத்து செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தினர். காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம பொது மக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிரந்தர தீர்வு கிடைகாத பட்சத்தில், தொடர் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.