திருச்சியில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்த பெண், 7 நாட்களுக்கு பின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் அலட்சியத்தால், மலக்குடலில் கத்தி கிழித்து, மலமும், ரத்தமும் கலந்து நிலைமை மோசமானதே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியது திடுக்கிட வைக்கிறது. ஏற்கனவே சுக பிரசவத்தில் பிறந்த குழந்தை 15 மணி நேரத்தில் உயிரிழந்த பகீர் சம்பவம் நடந்த அடுத்த 5 மாதங்களுக்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் ஜெனட் மருத்துவமனையில் நடந்துள்ள நிலையில், அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.6 வருட ஏக்கத்தை தீர்க்க வரமாய் கிடைத்த ஆண் குழந்தையை கையில் தூக்கி கொஞ்ச கூட கொடுத்து வைக்காத பெண், மருத்துவர்களின் அலட்சியத்தால் ஒரு வார காலம் நரக வேதனையை அனுபவித்து உயிரிழந்ததாக சொல்லப்படும் சம்பவம் நடுநடுங்க வைக்கிறது. திருச்சி, புத்தூர் நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டு வருகிறது ஜெனட் மகப்பேறு மருத்துவமனை. சுற்று வட்டாரங்களில் மிகவும் பிரபலமான மருத்துவமனை என்பதால், லால்குடி அடுத்த நகர் பகுதியை சேர்ந்த ஜெயராணி என்பவர் பிரசவத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், மறுநாள் முதல் ஜெயராணியின் உடல் நிலை மோசமானதாக சொல்லப்படுகிறது. இதனால், மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவ மனைக்கு மாற்றப்பட்ட நிலையில், செவ்வாய் கிழமை சிகிச்சை பலனின்றி ஜெயராணி உயிரிழந்தார்.அறுவை சிகிச்சையின் போது, மலக்குடலில் கத்தி கிழித்ததே ஜெயராணியின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழக்க காரணம் என கே.எம்.சி. மருத்துவர்கள் சார்பில் கூறப்பட்ட தகவலை கேட்டு கொந்தளித்த உறவினர்கள், ஜெனட் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, மருத்துவர்கள் ஆரம்பம் முதலே அலட்சியமாக செயல்பட்டதே ஜெயராணி உயிரிழக்க காரணம் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். அதாவது, கடந்த ஒன்றாம் தேதி, பிரசவ வலி ஏற்பட்ட உடன் அனுமதிக்கப்பட்ட ஜெயராணிக்கு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்க தொடங்கவில்லை என சொல்லப்படுகிறது. பொதுவாக நார்மல் டெலிவரி என்றால் வலி அதிகரிக்கும் வரை மருத்துவர்கள் காக்க வைப்பது வழக்கம். ஆனால், ஜெயராணிக்கு ஏற்கனவே கர்ப்ப பையில் நீர்க்கட்டி ஆப்ரேசன் செய்யப் பட்டது என்ற நிலையில், இது போன்ற CRITICAL CASEல் சிசேரியன் செய்வது என்று முடிவு செய்த பிறகும் கூட ஒரு நாள் முழுவதும் ஜெயராணியை மருத்துவர்கள் காக்க வைத்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல், 3ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், மறுநாள் முதலே கடும் வயிற்று வலியால் ஜெயராணி துடிதுடித்ததாக தெரிகிறது. ஆனால், அதனை கண்டு கொள்ளாத மருத்துவர்கள், சாதாரண GASTROUBLE என்று அலட்சியமாக பதிலளித்ததுடன் ANTIBIOTIC மட்டுமே கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜெயராணியின் முகம், கை, கால் போன்றவை வீக்கம் அடைந்ததால், அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனே அவருக்கு இனிமா கொடுத்து வயிற்றை சுத்தம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.ஏற்கனவே குழந்தை பிரசவித்த ஜெயராணிக்கு, இனிமா கொடுத்ததும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக சொல்கிறார்கள். இதனால், உடனே ஜெயராணியை மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனைக்கு தங்கள் ஆம்புலன்ஸ் மூலமே அனுப்பி வைத்திருக்கின்றனர் ஜெனட் மருத்துவர்கள்.அங்கு ஸ்கேன் செய்து பார்த்த போதுதான், ஜெயராணியின் மலக்குடலில் கத்தி கிழித்தது தெரிய வந்திருக்கிறது. அதோடு குடலில் ரத்தமும் மலமும் கலந்து நிலைமை மிகவும் மோசமாக இருந்ததும், இதையறிந்தே ஜெனட் மருத்துவமனையில் அவருக்கு இனிமா கொடுக்கப்பட்டதும் தெரிய வந்தது. மலக்குடலை கத்தி கிழித்தது பற்றி முன்கூட்டியே தெரிந்தும், அதற்கு முறையாக சிகிச்சை அளிக்காமல், நிலைமை கை மீறி போனதும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஜெயராணியை ஜெனட் மருத்துவர்கள் கொன்று விட்டதாக உறவினர்கள் ஆவேசமடைந்தனர். மருத்துவமனையை விட்டு அனுப்பும் வரை பணம் வசூலிப்பதில் மட்டுமே குறியாக இருந்த மருத்துவமனை நிர்வாகம், முன்கூட்டியே தரமாக சிகிச்சை அளித்திருந்தால், இன்று தனது மனைவி உயிருடன் இருந்திருப்பார் என தனது மன வேதனையை கொட்டினார் ஜெயராணியின் கணவர் ஜான்சன். இதனிடையே, மலக்குடலில் கத்தி கிழித்ததாக கூறப்படுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மருத்துவர், கர்ப்ப பையில் இருந்த கட்டியை மட்டுமே வெட்டி எடுத்ததாகவும், பின்பகுதியில் இருக்கும் மலக்குடலில் கத்தி பட வாய்ப்பே இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.ஆனால், மருத்துவரின் விளக்கத்திற்கு நேர்மாறாக ஜெனட் மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இது போன்ற பல துயர சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் சுக பிரசவத்தில் பிறந்த குழந்தை, 15 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அப்போதும் போராட்டங்கள் நடந்ததுடன் போலீசிலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டது.போலீசார் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்திருக்காது என்பதே குழந்தையை இழந்த அப்பெண்ணின் ஆதங்கமாக உள்ளது.இதேபோல், ஜெனட் மருத்துவமனை மீது பல்வேறு புகார்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதையும் பாருங்கள் - "என் புருஷனை கொன்னுடு" - MAAZA ஜூஸில் மயக்க மருந்து | Nigalthagavu | CrimeNews