கொடைக்கானல் மலைச்சாலையில் உலா வந்த காட்டெருமை அரசு பேருந்துக்கு வழிவிடாமல் மெதுவாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, ஆடலூர் உள்ளிட்ட கிராமங்களில் சமீப காலமாக யானை, காட்டெருமை மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி உலா வருவது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் வத்தலக்குண்டில் இருந்து ஆடலூர் வழியாக தாண்டிக்குடி சென்ற அரசு பேருந்து மலைச்சாலையில் சென்ற போது, காட்டெருமை ஒன்று வழிவிடாமல் நடந்து சென்றது. ஓட்டுநரும் ஒலி எழுப்பியபடி காட்டெருமையை பின்தொடர்ந்து பேருந்தை மெதுவாக ஓட்டிச்சென்றார்.