தமிழ்நாட்டில், 2032 ஆக இருந்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டி உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் கொடிசியாவில் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:தொழில்கள் வளர்ச்சி அடைகிறது என்றால், அந்த நிறுவனம் மூலம் மாநிலம் வளர்ச்சி அடையும். வளர்ச்சியின் அடையாளமாக தொழில் நிறுவனங்கள் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலத்தைத் தேடித் தான் தொழில்துறையினர் வருவார்கள். தமிழகத்தில், நிம்மதியாக தொழில் நிறுவனம் நடத்தலாம் என்றே இது போன்ற மாநாடு நடக்கிறது. எண்ணற்ற தொழில் முதலீடுகளையும், உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளோம். வரும் 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் முனைப்புடன் செயல்படுகிறோம். புதிய சிந்தனை, புதிய முயற்சி தொழில்துறைக்குள் வர வேண்டும். அதற்கான முயற்சியை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தொழில் துறையை பொறுத்த வரை, தமிழகம் முழுவதும் புத்தொழில் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.தமிழகத்தில் பெண்கள், இளைஞர்கள், விளிம்புநிலை மக்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் அரசின் புது யுக தொழில் திட்டம் சென்றடைய வேண்டும். இதற்காக முற்போக்கு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறோம். உலகின் தலை சிறந்த புத்தொழில் மையமாக தமிழகத்தை கட்டமைப்பது தான் திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு. பின்தங்கி இருக்கும் மக்களுக்கு, அரசின் திட்டம் சென்று அடைவதில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் தளத்தில் புதிதாக பதிவாகி உள்ளன. சிறந்த புத்தொழில் கொண்ட மாநிலங்கள் பட்டியலில், 2018ம் ஆண்டு கடைசி இடத்தில் இருந்த தமிழகம், 4 ஆண்டுகளில், 2022ல் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதில், சரி பாதி நிறுவனங்களை பெண்கள் தலைமையேற்று நடத்துவது மகிழ்ச்சி. தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உலகின் தலை சிறந்த புத்தொழில் மையமாக தமிழகத்தை உருவாக்குவோம். தமிழகத்தின் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டு நிறுவனங்களில் அரசு முதலீடு செய்யும் வகையில் ரூ.100 கோடியில் இணை உருவாக்க நிதியம் தொடங்கப்படும். இதன் மூலம் புதிய முதலீட்டு நிறுவனங்கள் உருவாகும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.