காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்லம்பட்டிடை பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கோரி, நியூஸ் தமிழுக்கு பேட்டி கொடுத்த இருளர் இன மக்களை வஞ்சிக்கும் விதமாக, மின் இணைப்பை துண்டித்து இருளில் மூழ்கடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரையும், திமுக பிரமுகர் ஆபாச வார்த்தைகளால் வசை பாடியதோடு, பேட்டி கொடுத்த மக்களையும் மிரட்டி, அராஜகமாக நடந்து கொண்டதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. விடிவு காலம் பிறந்த மகிழ்ச்சிகாஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்லம்பட்டிடை பகுதியில் எலுமியன்கோட்டூர் பழங்குடியின குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் படிப்படியாக வீடுகள் கட்டப்பட்டு, பழங்குடியின மக்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 15 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மழையிலும் வெயிலிலும் கிடந்து கஷ்டப்பட்ட தங்களுக்கு விடிவு காலம் பிறந்த மகிழ்ச்சியில், இருளர் இன மக்களும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஆனால், குடியேறி ஓராண்டு ஆனபோதிலும் அடிப்படை வசதிகள் அங்கு செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அண்மையில் கூட அக்குடியிருப்பில் பழுப்பு நிறத்தில் குடிநீர் வந்ததை நியூஸ் தமிழ் அம்பலப்படுத்தியது. கொக்கி போட்டு மின்சாரம் இந்நிலையில், குடியிருப்புக்கென தனி மின்கம்பம் அமைத்து மின்சாரத்தை விநியோகம் செய்யாமல், அருகேவுள்ள மின் கம்பத்திலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறித்து, நியூஸ் தமிழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனால் சிறு மழை பெய்தாலோ, காற்று வீசினாலோ மின்சாரம் தடைபடுவதாக இருளர் இன மக்கள் வேதனை தெரிவித்தனர். மின்சாரம் தடைபடும் போது மின்கம்பத்தில் குச்சியால் தட்டினால் தான் மீண்டும் மின்சாரம் வருமென கூறும் அவர்கள், மின்சாரம் அத்தியாவசியம் என்பதால் உயிரை துச்சமென நினைத்து அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கூறினர். குரலை உயர்த்தி மிரட்டினார்இந்நிலையில், முறையாக மின் இணைப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என நியூஸ் தமிழுக்கு பேட்டியளித்ததால், ஏக கடுப்பில் இருந்த சம்பந்தப்பட்டவர்கள் மின் விநியோகத்தை துண்டித்து, இருளர் இன மக்களை இரவு முழுக்க இருளில் தவிக்கவிட்டனர். இதனையறிந்து நியூஸ் தமிழ் செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்றபோது, வேதனையில் இருந்த மக்கள் சம்பவம் குறித்து பேட்டி கொடுத்து கொண்டிருந்தனர். அந்த சமயம் பார்த்து அங்கு காரில் வந்த திமுக பிரமுகர் பால்ராஜ், நீ அதிமுககாரனா? என்றும், காசு கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் பொய்யாக செய்தி போடுகிறாயா? எனவும் குரலை உயர்த்தி மிரட்டினார். வாய்க்கு வந்தபடி...தங்களது சொந்தக் காசை வாரி இரைத்து தான் இந்த வீடுகளுக்கு டைல்ஸ் வாங்கி கொடுத்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்டதோடு, அடிப்படை வசதி வேண்டிய பழங்குடியின மக்களையும் பால்ராஜ் மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், கேட்கக்கூடாத ஆபாச வார்த்தைகளால் செய்தியாளரை திமுக பிரமுகர் பால்ராஜ் கடுமையாக வசைபாடினார். அதோடு, திமுககாரனை அசிங்கப்படுத்துகிறாயா? எனவும், அதிமுககாரன் கிட்ட பணம் வாங்கிவிட்டாயா? என்றும் வாய்க்கு வந்தபடி பேசினார். அதிகாரத் திமிரோடு வலம்இவ்வளவு வரம்பு மீறி, செய்தி சேகரித்த செய்தியாளரையும் மிரட்டி, அப்பாவி மக்களையும் மிரட்டிய பால்ராஜ் யார்? என்றபோது தான் தெரிந்தது, அவர், அப்பகுதியின் ஊராட்சி மன்ற தலைவி கீதா லாரன்ஸின் கணவரது அண்ணன் என்பது. தேர்தலில் நின்று வெற்றி பெற்றதோடு சரி, அவ்வப்போது கிராம சபை கூட்டத்துக்கும், குடியரசு தின நிகழ்ச்சிக்கும் மட்டுமே தலைகாட்டும் தலைவி கீதா லாரன்ஸ், தொகுதிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததை போல இருக்கும் நிலையில் அவரது கணவரின் அண்ணனான பால்ராஜ், தன்னைத்தானே தலைவராக பாவித்துக் கொண்டு அதிகாரத் திமிரோடு வலம் வருவதாக சொல்லப்படுகிறது. செல்வப்பெருந்தகை கண்டனம் இந்த விவகாரம் தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான செல்வப்பெருந்தகையிடம் விளக்கம் கேட்டபோது, பத்திரிகையாளர்களை மிரட்டுவது ஜனநாயகத்தில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கண்டனம் தெரிவித்தார். கிடைத்தது மின் இணைப்பு, நன்றி இந்நிலையில், நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக எலுமியன்கோட்டூர் இருளர் குடியிருப்பில் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தனியாக மின் கம்பம் அமைத்து, அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியாக மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டது. நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதால், நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். Related Link இன்றைய ராசி பலன்கள் 31012026